தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? 3-வது கட்ட பேச்சுவார்த்தையை நோக்கி நீட் போராட்டம்!
நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த சமரசமும் இல்லை என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) மத்திய அரசிடம் திட்டவட்டமாக தெரிவித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிவுற்றது.
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சிஜேபி தலைவர்களுடன், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தலைமையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவே தங்களின் முதன்மை கோரிக்கை என்றும், அதில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் சிஜேபி வலியுறுத்தியது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி தேசிய செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா, தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரிக்கை குறித்து பதிலளிக்க அரசு சனிக்கிழமை மதியம் வரை அவகாசம் கேட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு தொடர்பாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது ஆகிய இரண்டு கோரிக்கைகளுக்கும் அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இதனிடையே, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்கும் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தச் சந்திப்பில் தர்மேந்திர பிரதானின் பதவி குறித்து இறுதி முடிவு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், கல்வி அமைச்சர் பதவி விலகாத பட்சத்தில் நாடு முழுவதும் நீட் எதிர்ப்பு போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று சிஜேபி எச்சரித்துள்ளது.
கரப்பான் பூச்சி கட்சி வலியுறுத்தியது போல் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? இல்லை மத்திய அரசு என்ன இறுதி முடிவு கொடுப்பார்களா? என்பதை சனிக்கிழமையின் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை தான் தெரியவரும். அதுவரைக்கும் எங்களின் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்துள்ளது.
What's Your Reaction?