அம்மிக்கல்- ஆட்டுக்கல் பிசினஸில் கோடிகளில் டர்ன் ஓவர்: தொழில் முனைவோராக அசத்தும் பிரியங்கா

கல், கருங்கல், கிரானைட் கல், இரும்பு உள்ளிட்டவற்றில் விதவிதமான சமையலறை சாதனங்கள் தயாரித்து விற்பனையில் அசத்தி வருகிறார் பிரியங்கா. அவருடன் மேற்கொள்ளப்பட்ட நேர்க்காணலின் தொகுப்பு

Apr 24, 2025 - 17:15
அம்மிக்கல்- ஆட்டுக்கல் பிசினஸில் கோடிகளில் டர்ன் ஓவர்: தொழில் முனைவோராக அசத்தும் பிரியங்கா
success story of entrepreneur priyanka

நம் முன்னோர் கடைப்பிடித்து வந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களின் அருமையை உணர்ந்து, அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள், இன்றைய மக்கள். அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில், கல், கருங்கல், கிரானைட் கல், இரும்பு உள்ளிட்டவற்றில் விதவிதமான சமையலறை சாதனங்கள் தயாரித்து விற்கிறார், புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரியங்கா. குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழுக்காக அவருடன் மேற்கொண்ட நேர்க்காணலின் விவரங்கள் பின்வருமாறு-

இந்த யோசனை எப்படி வந்தது?

‘‘எனக்குத் திருமணமாகி, முதல் குழந்தை பிறக்கும்வரை எங்கள் வீட்டுச் சமையலறையில் ‘நான்ஸ்டிக்’ பொருள்களைத்தான் பயன்படுத்தினோம். ‘நான்ஸ்டிக்’ தோசை தவா பயன்படுத்தினால், அது ஒட்டாமல் இருக்கும், எண்ணெய்ப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. சுத்தம் செய்வதும் எளிது என்பதால்தான் அதைப் பயன்படுத்தினோம். தோசை தவா மட்டுமல்ல... சமையலுக்குப் பயன்படுத்தும் பல பொருள்கள் நான்ஸ்டிக்கில்தான் இருக்கும். இந்த அவசர உலகத்தில் அது மிகவும் வசதியாக இருந்தது. ஆனால், குறிப்பிட்ட நாள் கழித்து, நான்ஸ்டிக் பாத்திரத்தில் உள்ள ‘கெமிக்கல் கோட்டிங்’ பெயர்ந்து, உணவுடன் கலந்துள்ளது. ஆனால், அதை நாங்கள் கவனிக்காமலேயே இருந்திருக்கிறோம். நாளடைவில் கெமிக்கல் அதிகளவில் வெளியானபோதுதான், அந்தப் பாத்திரங்கள் நல்லதல்ல என்பதைப் புரிந்துகொண்டோம்.

இதையடுத்து, ‘நான்ஸ்டிக்’ பாத்திரங்களைத் தூக்கிப்போட்டுவிட்டு, நம்முடைய பாரம்பரியமான சமையலறைப் பொருள்களைத் தேட ஆரம்பித்தோம். பாரம்பரிய சமையல் பாத்திரங்கள் மட்டுமல்லாமல்; அம்மிக்கல், ஆட்டுக்கல் என எல்லாவற்றையும் நானும் என் கணவரும் தேடியபோது, பெரிய அளவில் கிடைக்கவில்லை. தவிர, அலுமினியப் பாத்திரங்களும்கூட கேடு விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றையும் ஒதுக்கினோம். இரும்புப் பாத்திரங்களில் சமைப்பது நல்லது என்பதால், அவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினோம். பிறகு, இதையே ஒரு தொழிலாகத் தொடங்கினால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது.’’ 

எப்போது இந்தத் தொழிலைத் தொடங்கினீர்கள்? 

‘‘2018-ம் ஆண்டு வாக்கில் நாங்கள் எங்கள் வீட்டில் சமையலுக்காக இரும்புப் பாத்திரங்களையும், கருங்கல்லில் தயாரிக்கப்பட்ட அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தத் தொடங்கினோம். அப்போது, ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தேடியபோது, அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. ஏற்கெனவே அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் எங்களிடம் விசாரித்ததால் அவர்களால் அவற்றைத் தயாரிக்க ஆரம்பித்தோம். இரும்புக்கடாய், தோசை தவா, வடைச்சட்டி மட்டுமல்லாமல்; அம்மிக்கல், ஆட்டுக்கல், திருகைக்கல், கல்விளக்கு என மக்களின் தேவையறிந்து, அவர்கள் விரும்பிய டிஸைன்களில் செய்யத் தொடங்கினோம். 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட பிஸினஸ் இது.’’ 

இரும்புக்கடாய், அம்மிக்கல்லை நீங்களே செய்கிறீர்களா? இல்லை, ஆர்டர் கொடுத்து வாங்குகிறீர்களா? 

‘‘பொருள்களை விற்பனை மட்டும்தான் செய்கிறோம். ஆனால், ஒவ்வொரு பொருளையும் எங்களுடைய ஆலோசனையின் பேரில், இதுபோன்று பொருள்கள் செய்பவர்களிடம் ஆர்டர் கொடுத்து, வாங்குகிறோம். 

ஊத்துக்குளியில் அதிகளவில் கல் பொருள்கள் தயாரிக்கிறார்கள். ஆகவே, அவர்களிடம் ஆர்டர் கொடுத்து வாங்குவோம். இதேபோல், சேலத்தில் கிரானைட்டில் பொருள்கள் செய்கிறார்கள். அவர்களிடமும் ஆர்டர் கொடுத்து, வாங்கி விற்கிறோம். இரும்புப் பொருள்களை மதுரையிலிருந்து வாங்கிக் கொள்கிறோம். 2018-ம் ஆண்டு, வீட்டிலிருந்தபடியே இதை ஒரு தொழிலாக செய்யத் தொடங்கிய நாங்கள், 2021-ம் ஆண்டு ஒரு கடைப் பார்த்து, அங்கே எல்லா பொருள்களையும் வைத்து, விற்க ஆரம்பித்தோம். கடையில் விற்பனை செய்வதற்காக ஒருவரை வேலைக்கு வைத்தோம். இப்போது 4 பேர் வேலை செய்கிறார்கள்.’’ 

விற்பனை எப்படி இருக்கிறது? 

‘‘ஆரம்ப காலங்களில் பெரிய அளவில் விற்பனை கிடையாது. ஆனால், இன்றைக்கு ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகிறது. ‘அமேஸான்’, ‘ஃபிளிப்காட்’ மூலமாக எங்கள் பொருள்களை விற்கிறோம். ஆனால், அவர்கள் அதில் லாபம் பார்ப்பதற்காக விலையை அதிகம் வைத்திருப்பார்கள் என்பதால், நாங்களே சொந்தமாக வெப்சைட் தொடங்கியுள்ளோம். கூடியவிரைவில் அதன்மூலமாக பொருள்களை விற்க உள்ளோம். அதில், நியாயமான விலையில்தான் பொருள்கள் கிடைக்கும்.’’ 

இரும்புக்கடாய், அம்மிக்கல், ஆட்டுக்கல் தவிர, வேறு என்னென்ன பொருள்கள் விற்கிறீர்கள்? 

‘‘இரும்புக்கடாய் மட்டுமல்லாமல், இரும்பில் வேறு என்னென்ன சமையல் பாத்திரங்கள் செய்யமுடியுமோ அனைத்தும் எங்களிடம் கிடைக்கும். கருங்கல்லில் அம்மிக்கல், ஆட்டுக்கல் செய்வதுபோல கிரானைட் கல்லிலும் செய்கிறோம். முக்கியமாக, வெற்றிலை, மருந்துப்பொருள்கள் இடிக்கும் சிறிய உரலை கிரானைட் கல்லில் தயாரிக்கிறோம். என் கணவரின் உதவி இருப்பதால், இப்போது எங்களால் என்னென்ன பொருள்களைக் கொடுக்கமுடியுமோ அவற்றைத் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம். காப்பர் பாத்திரங்களும்கூட விற்பனை செய்கிறோம். இப்போது, ‘ஹெர்பல் ஹேர் ஆயில்’ மற்றும் ‘ஹெர்பல் சோப்’களும் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம்.’’ 

இப்போது பாரம்பரிய பொருள்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், புதிதாகத் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு உங்களுடைய ஆலோசனை? 

‘‘எங்களிடம் ஆலோசனை கேட்ட மூவருக்கு நாங்களே அதற்கான வழிவகைகள் செய்துகொடுத்துள்ளோம். எங்களுக்கான விற்பனை எப்போதும் இருக்கும். ஆனால், எல்லோருடைய தேவைகளையும் எங்களால் பூர்த்திசெய்ய முடியாது என்பதால், இதுபோல் கேட்பவர்களையும் நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம். அவர்கள் மூலமாக எல்லோருக்கும் கிடைக்கட்டும்.’’ 

 -(குமுதம் சிநேகிதி-3.4.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow