இடைத்தேர்தல் ரேஸ் தொடங்கியது! அதிமுக களத்தில் இறக்கிய வேட்பாளர்கள் யார் ?

இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக, திமுகவுக்கு அடுத்ததாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.

Sep 10, 2026 - 19:50
இடைத்தேர்தல் ரேஸ் தொடங்கியது! அதிமுக களத்தில் இறக்கிய வேட்பாளர்கள் யார் ?
ADMK Candidates for Tamil Nadu Bypolls

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் :

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன.

இடைத்தேர்தலில் கடும் போட்டி :

சட்டமன்ற தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே இந்த இடைத்தேர்தல் நடைபெறுவதால், அரசியல் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. புதிதாக ஆட்சி அமைத்துள்ள த.வெ.க. தனது பலத்தை நிரூபிக்க முயற்சிக்கும் நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் வெற்றியை கைப்பற்ற தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக, தவெக வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிப்பு :

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் பரந்தாமனும், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் கடந்த காலங்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு :

இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 'மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி - கணிதா சம்பத்', 'தாராபுரம் சட்டமன்ற தொகுதி - கே. பானுமதி' ஆகியோர் அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow