எம்புரான் படத்திற்கு தடை விதிக்க தமிழக விவசாயிகள் கோரிக்கை.. என்ன காரணம்?
முல்லை - பெரியாறு அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்கிற கருத்துக்கள் இடம்பெற்றுள்ள எம்புரான் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் கொடுத்துள்ள சான்றை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மோகன்லால், மஞ்சு வாரியார் ஆகியோருடன், பிருத்திவிராஜ் சுகுமாரன் இயக்கியும், நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லை-பெரியாறு அணை குறித்து இடம்பெற்றுள்ள வசனத்திற்கு விவசாயிகள் மத்தியில் கண்டனம் கிளம்பியுள்ளது. இதுத்தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு..
”எம்புரான் படத்தில் நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும், திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் நேரடியாகவே இந்த திரைப்படத்தில் நான்கு இடங்களில் முல்லைப் பெரியாரை குறி வைத்து இடம்பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இது போன்ற கருத்துக்களை கொண்ட படங்களை எப்படி மத்திய தணிக்கை வாரியம் அனுமதி கொடுத்தது என்பது அதைவிட பேரதிர்ச்சியாக உள்ளது.
கடந்த 2006, 2014 ஆகிய ஆண்டுகளில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது, 152 அடி தண்ணீர் தேக்கலாம் என உத்தரவிட்ட பின்பும், தீர்ப்புக்கு எதிரான கருத்துக்களை படத்தில் இடம்பெற மத்திய தணிக்கை வாரியம் அனுமதித்திருக்கக் கூடாது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1 கோடி மக்கள் முல்லைப் பெரியாறு அணையை கோவிலாகவும், அதை கட்டிய கர்னல் பென்னி குவிக் அவர்களை கடவுளாக வழிபட்டும், தமிழ்நாட்டின் உரிமையின் சின்னமாக தமிழ்நாட்டு மக்கள் கருதும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்கிற கருத்து விஷமத்தனமானது, தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் பகையை ஊட்டக்கூடியது, பிரிவினை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் மத்திய தணிக்கை வாரியம் வழங்கியுள்ள தணிக்கை சான்றிதழை உடனடியாக ரத்து செய்வதே சரியானதாகும்.”
கேரளாவிற்கு மிகப்பெரிய ஆபத்து இடுக்கி அணையே:
”இது போன்ற விஷமத்தனமான கருத்துக்களை உள்ளடக்கிய திரைப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியும் தமிழ் சினிமாவில் இருப்பவர்களும், தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளும் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை விட ஆபத்தானதாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை ஆகிய தாலுகாக்கள் தமிழர்கள் மொழி வழி பிரிவினையின்போது மிகப் பெரும்பான்மையாக வாழ்ந்த பகுதிகள், தற்போது பீர்மேடு தாலுகாவில்தான் முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கிறது, மொழி வழி மாநிலங்கள் பிரிவினையின்போது கேரளாவின் நயவஞ்சகத்தால் தமிழ்நாடு இழந்த பகுதிகளாகும், கேரளாவிலும், மலையாள சினிமாவிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வருவதில் இந்த படம் உச்சத்தை தொட்டு இருக்கிறது.
மேலும் கேரளாவிற்கு மிகப்பெரிய ஆபத்து இடுக்கி அணையே, முல்லைப் பெரியாறு அணை என்பது 10 டிஎம்சி நீர் கொள்ளளவைக் கொண்டது, அதிலும் தற்போது 7 டிஎம்சி நீர் மட்டுமே சராசரியாக தேக்கப்படுகிறது, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 10 கிலோமீட்டர் கீழே 70 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணை மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது, முல்லைப் பெரியாறு அணையே இடிந்தாலும், இடுக்கி அணை கூட நிரம்பாது, ஆனாலும் முல்லைப் பெரியாறு நீர் இடுக்கி அணைக்கு வேண்டும் என்கிற உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, முல்லைப் பெரியாறு மீது தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான, தமிழின விரோத கருத்துக்களைக் கொண்ட, எம்புரான் திரைப்படத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள தணிக்கை சான்றிதழை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் எம்புரான் படத்தை திரையிடுவதற்கு உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். மேலும் தமிழ்நாட்டு விவசாயிகள் இணைந்து எம்புரான் படத்தை தயாரித்து வெளியிட்ட கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிப்போம் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






