இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Sep 9, 2026 - 14:42
இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
Tamil Nadu Weather Alert

தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 9) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு காரணமான வளிமண்டல நிலை :

சுமார் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் ராயலசீமா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் மழை பெய்யும் பகுதிகள் :

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை நிலவரம் :

செப்டம்பர் 9 முதல் 13-ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. சில இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

உள் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும்.

சென்னை வானிலை முன்னறிவிப்பு :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளில் இன்று (செப்டம்பர் 9) குமரிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது வானிலை எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow