கரூர் சம்பவம்: சீமானுக்கு கால் செய்த நிர்மல்?...பகீர் கிளப்பும் சாட்டை..!
கரூர் சம்பவத்தின் போது அமைச்சர் நிர்மல்குமார் நாம் தமிழர் கட்சியிடம் உதவி கேட்டதாகவும்,அறிக்கை விட சொல்லி வற்புறுத்தியதாகவும், சாட்டை துரைமுருகன் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று (8.09.2026) இறுதி கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்தது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பெரும் புயலாக எதிர்க்கட்சியினருக்கும், ஆளுங்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.
இந்த கூட்டத்தொடரில் மிசா குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் பேசியதுதான் தமிழ்நாடு அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவருடைய கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், மிசா குறித்து முதலமைச்சர் பேசியது சம்பந்தமாக தனது யூடியூப் பக்கத்தில் தொடர்ச்சியாக வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைச்சர் நிர்மல் குமார் பகிர்ந்துள்ள ரகசியம் தற்போது தமிழ்நாடு அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது. அதாவது, கரூர் சம்பவம் நடந்த சமயத்தில் அவர், நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆதரவைக் கோரியதாக அந்த வீடியோவில் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவில் அவர் பேசுகையில், “கரூரில் சம்பவம் தொடர்பாக ஒரு உண்மையை சொல்லட்டுமா? என்று அதில் இன்றைக்கு சட்டப்பேரவையில் நின்று பேசிக்கொண்டிருக்கக்கூடிய நிர்மல் குமார், நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பாளராக இருக்கக்கூடிய ஒருவருக்கு தொலைபேசி மூலம் அழைத்து, ‘நாங்கள் எல்லோரும் பதற்றத்தில் இருக்கிறோம். இதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இதை எதிர்கொள்ள ஒரு அறிக்கையைத் தயார் செய்து தாருங்கள்’ என்று நிர்மல் குமார் கேட்டுள்ளார். இது தொடர்பாக கேட்கும்போது நான் பக்கத்தில்தான் இருந்தேன். அதற்கு நான் சாட்சி” என்று கூறியுள்ளார்.
“ஒரு அறிக்கை மட்டும் விடுங்கள் என்று சீமானிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நீங்கள் விடவில்லை என்றாலும் எங்களுக்கு எழுதி கொடுங்கள் என்று கேட்டார்கள்” என்று கூறியுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சியினர், “நாங்கள் அறிக்கை போட முடியாது” என்று மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நிர்மல் குமார், நீங்கள் கேட்டீர்களா, இல்லையா? பயந்துபோய் கோழைத்தனமாக இருந்தீர்கள். நீங்கள் அறிக்கை கேட்டதற்கு நான் சாட்சி. பக்கத்தில் நான் இருக்கும் போதுதான் போன் பண்ணினீர்கள். யாருக்கு போன் பண்ணினீர்கள் என்று சொல்லட்டுமா? அலைப்பேசி எண்ணை வேண்டுமென்றால் எடுத்து போடட்டுமா?” எனக் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார் சாட்டை துரைமுருகன்.
“எல்லோரும் பதறிப்போய் கிடந்தீர்கள். நாங்கள் அறிக்கையெல்லாம் போட முடியாது. அங்கு 41 பேர் இறந்து இருக்கிறார்கள் என்று நாங்கள் மௌனமாக இருந்தோம். இதை இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா? நீங்கள் எல்லாம் சட்டசபையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள்” என சாட்டை துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
மேலும், “41 பேர் இறந்தபோது கோழைத்தனமாக பயந்துபோய் கிடந்து, ஒன்றிய அரசு, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் ஆதரவு அளித்ததை வைத்து இவ்விவகாரத்தை சமாளித்தீர்கள். அதோடு, அவர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றால் எங்கு போயிருப்பீர்கள்?” எனவும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சாட்டை துரைமுருகன் போட்டுடைத்துள்ள இந்த விஷயம் தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி கவனம் பெற்று வருகிறது.
“இப்படி சீமானிடம் ஆதரவு கேட்டுவிட்டுத்தான், தேர்தலுக்கு முன்பாக அவரை விமர்சனம் செய்து பேசினீர்களா நிர்மல் குமார்?” என நாதகவினர் இணையத்தில் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும், இன்னும் எத்தனை உண்மைகள் மறைக்கப்பட்டிருக்குமோ என்ற பல கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்து வருகின்றன. மேலும் அந்த முக்கிய பொறுப்பாளர் சீமானாக கூடி இருக்கலாம்? என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுகிறது.
What's Your Reaction?