மக்களவைத் தேர்தல்...தஞ்சையில் மட்டும் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் நேற்று (16.03.2024) அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்றைய தினமே அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி என தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் தேர்தலுக்கான ஏற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர்கள், வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் 7,26,145 ஆண் வாக்காளர்கள், 7,72,936 பெண் வாக்காளர்கள், 128 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 14,99,209 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1184 வாக்குச்சாவடிகள் உள்ளன. 72 பறக்கும் படை குழுக்கள், 24 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 8 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை சுழற்சி முறையில் 24 மணிநேரம் கண்காணிக்க ஈடுபடுத்தப்பட்டுள்ளன" என்று கூறினார். மேலும், தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட 1184 வாக்குச்சாவடிகளில் 114 பதற்றமானவை என தெரிவித்தார். தொடர்ந்து C-vigil ஆப் மூலம் பொதுமக்கள் புகார் செய்ய மற்றும் SUVIDHA ஆப் மூலம் கூட்டத்திற்கான அனுமதி எப்படிப் பெறுவது என்பது குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான புகார்களை 24 மணிநேரமும் பொதுமக்களிடமிருந்து பெறுவதற்கு, இலவச தொலைபேசி எண்களான 18004259464 மற்றும் 1950 மூலம் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?