காமராஜர் நல்லடக்கம் சர்ச்சை: வாய்விட்ட தாரகை....தக்க பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!
முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மறைந்த போது அவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு, அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு அனுமதி தரவில்லை என்று தாரகை கத்பர்ட் குற்றஞ்சாட்டிய நிலையில், இன்று நடைபெற்ற சட்டபேரவையில் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில்,நேற்றைய தினம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் உழவர் நலத்துறை ஆகிய நான்கு முக்கிய துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் தாரகை கத்பர்ட் கலைஞர் முதலமைச்சராக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சிக்காலத்தில்,பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் அவருடைய திருவுடல் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தியை பதிவு செய்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பதிலளித்த தங்கம் தென்னரசு, வரலாற்றிலும், இந்தப் பேரவையிலும் பிழையான செய்திகள், உண்மைக்கு மாறான செய்திகள் பதிவாகிவிடக் கூடாது என்கின்ற அடிப்படையில், சில விளக்கங்களை நான் இங்கே அளிப்பது என்னுடைய கடமை என்று நான் கருதுகிறேன்.
பெருந்தலைவர் காமராசர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காலையில் இயற்கை எய்தினார். அவர் மரணமடைந்த செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர், உடனடியாக காமராஜருடைய இல்லத்திற்கு விரைந்து சென்று, அவருக்கு மரியாதை செலுத்தினார்.
கலைஞர் சொன்னது என்ன?
இதற்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் பேசுகையில், “காமராசர் பெருந்தலைவர்; காமராசர் ஏதோ காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் மாத்திரம் கிடையாது. அவர் ஒரு பெரிய தேசியத் தலைவர். அவரை உரிய முறையிலே நாம் அடக்கம் செய்து, நினைவிடம் கட்ட வேண்டும்” என்று வலியுறுத்தியதுடன், அவருடைய திருவுடலை உடனடியாக ராஜாஜி மண்டபத்திற்கு கொண்டுவந்து, முழு அரசு மரியாதையோடு அங்கே பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நடவடிக்கையும் எடுத்தார்.
காந்தியடிகளுடைய நினைவு மண்டபம் அமைந்திருக்கக்கூடிய கிண்டியில், காமராசர் அடக்கம் செய்யப்பட்டு, அங்கே அவருக்கு ஒரு நினைவிடம் வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார் கலைஞர்.
அதனால், அன்றைக்கு அப்போதே திண்டிவனம் ராமமூர்த்தி, மேலவை எதிர்கட்சித் தலைவராக இருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த ராஜாராம் நாயுடு, கல்வி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று, கொட்டும் மழையிலும் கலைஞர் அங்கேயே நின்று, அங்கே இருக்கக்கூடிய புதர் செடிகள் எல்லாம் அப்புறப்படுத்தி, விளக்குகள் கூட இல்லாமல் காருடைய முன் முகப்பு விளக்குகளைப் பொருத்திக் கொண்டு, அதை சீர்திருத்தம் செய்து, அங்கே நினைவு மண்டபத்தை உருவாக்கினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக இருந்த பெருந்தலைவர் பாரா ராமசந்திரன் கலைஞர் செய்த செயலை கண்டு மன நெகிழ்ச்சியுடன் அவரை பாராட்டினார்.
இது குறித்து மேலவையிலே அன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்த ராஜாராம் நாயுடு பேசுகையில், “காமராசர் மறைந்த அன்று, எங்கு பேசினாலும் இதை சொல்லாமல் இருக்க முடியாது. நமது மாநில அரசை நடத்தும் முதலமைச்சர் அவர்களும், கல்வி அமைச்சர் அவர்களும், மற்ற அமைச்சர்களும் அங்கு வந்து, அவர்களுடைய சகோதரர்களில் ஒருவர் இறந்து விட்டதைப் போல் அந்த இடத்தில் தோற்றம் அளித்தார்களே தவிர, மற்றொரு கட்சியினுடைய தலைவர் இறந்தார்கள் என்று அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை.
எங்களை கட்டிப்பிடித்து முதலமைச்சர் அன்று துக்கம் தெரிவித்ததும் அழுததும், என்னுடைய உயிர் உள்ள அளவும் மறக்க முடியாது. அவ்வளவு பாச உணர்ச்சியை அவர்கள் காட்டினார்கள்.
தமிழ்நாடு அரசாங்கத்திடமிருந்து அன்று அரசு மரியாதையை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலே அவருடைய பிரேதத்தைப் பார்வைக்கு வைத்து, அங்கேயே எரித்து நினைவுச் சின்னம் கட்டுவது என்றுதான் முதலில் முடிவு செய்திருந்தோம்.
இதை எப்படி கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதே வினாடியில் முதலமைச்சர், காமராசர் வீட்டுக்குள் வந்துவிட்டார். அவர் வந்ததும், முதல் வேலையாக, ”இங்கே கூட்டத்தை சமாளிக்க முடியாது, உடனே ராஜாஜி காலுக்கு கொண்டு போக வேண்டும்” என்று நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஏதோ கனவு கண்டது போல சொன்னார்கள்.
எங்கள் மனதை எப்படி தெரிந்து கொண்டார்கள் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. எனக்கும் என்னுடைய சகாக்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவருக்கும் இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்றே புரியவில்லை.
பிறகு ராஜாஜி ஹாலுக்கு வந்து எவ்வாறு காமராஜர் உடலை வைக்க வேண்டும் என்று சரிசெய்து, மேடை போட்டுக் கொண்டிருக்கக்கூடிய நேரத்தில், அங்கேயே அமைச்சரவை கூடியது என்ற வகையில் எல்லா அமைச்சர்களும் அங்கே வந்துவிட்டார்கள்.
காமராஜரை அடக்கம் செய்வது எங்கே என்பதற்கு காந்தி மண்டபத்திற்கு பக்கத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
அவர்களே செய்திருக்கலாம், எங்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டியதில்லை. இருந்தாலும் எங்களையும் அழைத்துக் கொண்டு அந்த இடத்தில் அந்த இரவில் வெளிச்சமில்லை. கார்களை எல்லாம் திருப்பி நிறுத்தி விளக்கை போட்டு இடத்தை தேர்ந்தெடுத்து, அன்றிரவே அங்குள்ள மரங்களை எல்லாம் அகற்றி, இரவெல்லாம் முதலமைச்சர் அங்கேயே தூக்கமில்லாமல் இருந்து ஏற்பாடுகளை எல்லாம் செய்தார்கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று எங்களுக்குத் தெரியவே இல்லை. கட்சியைப் பற்றி நான் என்னவில்லை. ஆனால், என்னை பொறுத்தவரையில் என்றுமே இதை மறக்க முடியாது. நான் உள்ள அளவும் அதை மறக்க முடியாது” என்று பெரியவர் ராஜாராம் நாயுடு அவர்கள் சொன்னது இன்றைக்கு மேலவையினுடைய அவை குறிப்புகளில் இருக்கிறது.
கலைஞர், அவரைத் தொடர்ந்து ஸ்டாலின் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் எல்லாம் காமராஜருக்கு எவ்வளவு சிறப்பு செய்தனர் என்பதை நாம் தொடர்ந்து பல்வேறு விஷயங்களை சொல்லலாம்.
மெரினா கடற்கரை கடற்கரை சாலைக்கு பெயர் வைப்பதில் இருந்து, இதோ காமராசருடைய படம் இங்கே இருக்கிறது. மக்கள் திலகம் அவர்கள் இந்த படத்தை இந்த அவையிலே திறந்து வைக்கக்கூடிய காலத்தில், அதற்கு கீழே இருக்கக்கூடிய இந்த உழைப்பே உயர்வு தரும் என்ற வார்த்தையை கூட அன்றைக்கு அந்த வாசகத்தை எழுதி தந்தவர் கலைஞர்.
எனவே அன்று தொடங்கி அவருடைய பிறந்தநாளை கல்வி வள்ர்ச்சி நாளாக சட்டமாக கொண்டுவரக்கூடிய அந்த நிலைவரை கூட எண்ணற்ற விஷயங்களை நான் அடுக்கலாம்.
என்றைக்கும் பெருந்தலைவருக்கு மிகுந்த மரியாதையோடு எல்லா சிறப்புகளும் செய்தவர் நம்முடைய முதலமைச்சராக இருந்த கலைஞர், திராவிட முன்னேற்றக் கழக அரசு நம்முடைய முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் என்பதை இந்த அவைக்கு எடுத்துச் சொல்லி அமைகிறேன் என்று நேற்று வைத்த குற்றச்சாட்டுக்கு தங்கம் தென்னரசு ஆதாரங்களுடன் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே சிடி பிரபாகர் ,“தங்கம் தென்னரசு இந்த குறிப்பை படிக்க வேண்டும் என்று அவர் சொன்னபோது, சில வரலாற்று குறிப்புகள் இப்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைக்குத் தெரிய வேண்டும் என்கின்ற காரணத்தினால் தான் அதை படிக்க அனுமதித்தேன். அந்த காலகட்டத்தில் கட்சி ஆட்சிகளை எல்லாம் மறந்து கொள்கை வேறுபாடு எல்லாம் மறந்து ஒருவருக்கொருவர் எப்படி அன்போடும் பண்போடும் நடந்து கொண்டார்கள் என்பதற்கு இதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்று பேசினார்.
பதில் சொல்லாமல் தவித்த தாரகை கத்பர்ட்
What's Your Reaction?