திருவாரூர் ஆழித்தேரோட்டம்... விண்ணைப் பிளந்த பக்தர்கள் முழக்கம்....
விழாவையொட்டி 2,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா, ஆண்டு தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான, ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித் தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா பிப்ரவரி 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இந்த நிலையில், தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம், இன்று (மார்ச் 21) காலை கோலாகலமாக தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். 96 அடி உயரம், 30 அடி அகலத்தில் 4 வீதிகளிலும் ஆழித்தேர் அசைந்தாடி வந்ததைக் கண்டு, பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். மேலும், பஞ்ச வாத்தியங்கள் முழங்க, திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.
முன்னதாக, முருகன், விநாயகர் தேர்கள் ஊர்வலம் நடைபெற்றது. விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் 2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
What's Your Reaction?