”ஆணவத்தில் தவெக அரசு..” – ஆத்திரத்தில் உதயநிதி..!

விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் கைதை கண்டித்து தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின். 

Jul 20, 2026 - 18:31
”ஆணவத்தில் தவெக அரசு..” – ஆத்திரத்தில் உதயநிதி..!

தவெக ஆட்சி அமைந்த்து முதல் திமுகவினர் மீது பல்வேறு வழக்குகள் வைத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தவெக. முன்னாள் அமைச்சர்கள் சிவசங்கர், எவ வேலு, செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் என அடுத்தடுத்து திமுகவின் முக்கிய முகங்கள் மட்டுமல்லாமல், திமுகவின் ஜென் ஸி அமைப்பை சேர்ந்தவர்களையும், தவெகவிற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை தமிழ்நாடு காவல்துறையை ஏவி தவெக அரசு பழிவாங்குவதாக அறிவாலய வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

இந்த நிலையில், தற்போது திமுகவைச் சேர்ந்த மேலும் நபர் மீது தவெக அரசு கைவைத்துள்ளது. அதாவது, முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ., மார்கண்டேயனை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மார்க்கண்டேயன்,” எங்களுடைய தலைவர்களை அவமரியாதை செய்தால் உங்களை அடித்து விரட்டவும் தயங்க மாட்டோம். சட்டமன்றத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கு எது பேசினாலும் அடிப்போம்.  பேயடிச்சவன் மாதிரி சட்டசபையில் முதலமைச்சர் விஜய் உட்கார்ந்து இருக்கிறார். கொத்து பரோட்டா போடுவேன் என சொல்கிறார். உன்னை மாதிரி ஆயிரம் பரோட்டாவைப் பார்த்தவன் நான்” என்று அவர் பேசி இருந்தார். 

மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், இன்று (ஜூலை 20) அதிகாலையே அவரை கைது செய்ய போலீசார் வீட்டிற்கு வந்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மார்கண்டேயன் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்,மார்க்கண்டேயனின் கைது தொடர்பாக உதயநிதி கண்டித்து பதிவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள். பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை. 

இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.  இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது. எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற - விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம். மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி” என்று பதிவிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow