”உங்களோட பையன் தான் உங்க கூட இல்ல..” – கைதான எம்.எல்.ஏ… கதறிய மகன்..!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள விளாத்திகுளம் எம்எல்ஏ மகனின் பேச்சு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. 

Jul 21, 2026 - 10:39
”உங்களோட பையன் தான் உங்க கூட இல்ல..” – கைதான எம்.எல்.ஏ… கதறிய மகன்..!

தவெக ஆட்சி அமைந்தது முதல் திமுகவினர் மீது பல்வேறு வழக்குகள் வைத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தவெக அரசு, தற்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ மீது எடுத்துள்ள நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ., மார்கண்டேயனை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மார்க்கண்டேயன்,” எங்களுடைய தலைவர்களை அவமரியாதை செய்தால் உங்களை அடித்து விரட்டவும் தயங்க மாட்டோம். சட்டமன்றத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கு எது பேசினாலும் அடிப்போம்.  பேயடிச்சவன் மாதிரி சட்டசபையில் முதலமைச்சர் விஜய் உட்கார்ந்து இருக்கிறார். கொத்து பரோட்டா போடுவேன் என சொல்கிறார். உன்னை மாதிரி ஆயிரம் பரோட்டாவைப் பார்த்தவன் நான்” என்று அவர் பேசி இருந்தார். 

மார்க்கண்டேயனின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், போலீசாரால் அவர் நேற்று (ஜூலை 20) கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 351(3), 352, 353(2) BNS என்ற மூன்று பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காலை 7:30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கூட்டி வந்த நிலையில், மாலை 6:30 மணிக்கு தான் விசாரணை முடிவு பெற்று இருக்கிறது. சுமார் 11 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை முடிந்து உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து அவரது மகன் அக்க்ஷய் மார்க்கண்டேயன்  செய்தியாளர்களை சந்தித்துக் கூறும் போது, ”ஒரு மூளை தான் உடம்பை இயக்கிறது.  அந்த மூளை நாட்டுக்கு இருக்கக்கூடிய சட்டமன்றம் அந்த சட்டமன்றத்திற்குள் எல்லா எம்எல்ஏகளை அடைத்து வைக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கூறுகிறார் என்றால் சட்டமன்றத்தை கைப்பற்றி அவர்கள் சட்டங்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை நிறைவேற்றப்படனும் என்று நினைக்கின்றார்கள்.

வரலாறு இது எல்லாம் பார்த்து இருக்கிறது. (முதல்வர் விஜய்) உங்க பையன் தான் உங்களோட இல்லை.. என்னுடைய அப்பா எங்களுக்காகவும், விளாத்திகுளம் மக்களுக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கின்றார்.. அவர்கள் எங்களோடு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம் இப்படி எல்லாம் பண்ணாதீர்கள்.

மேலும், விசாரணை எவ்வளவு நேரம் தான் விசாரிக்க முடியும் ஒரு மணி நேரம் விசாரிக்கலாம்.. ஐந்து நிமிடம் தான் வீடியோ. ஆனால் காலையில் இருந்து தற்போது வரை 13 மணி நேரம் விசாரணை செய்து இருக்கிறார்கள். அவருக்கு சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்கள் இருக்கிறது அவரை பயம் புறுத்துத்துகிறார்கள். 

அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது படி சொல்ல வேண்டும் என்று பயமுறுத்துகிறார்கள்.. துப்பாக்கி முனையில் மிரட்டியது முற்றிலும் உண்மை தான்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow