”நிரந்தர நீக்கமே ஒரே தீர்வு….” - மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய வைரமுத்து..!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், இதற்கு ஒரே தீர்வு நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, பல்வேறு பகுதிகளில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரிலும் இன்றும் ஏராளமான இளைஞர்கள் திரண்டுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வதே தற்போதைய பிரச்னைக்கு தீர்வாக அமையும் என கவிஞர் வைரமுத்து தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ சிறுதுளிகள் சேர்ந்துவிட்டன தில்லியிலே.. சிறுதுளியின் அடுத்த நிலை என்ன என்பதைப் பழமொழி அறிந்தவர்கள் அறிவார்கள்.. மழை வெள்ளத்திலும் வலியது மனித வெள்ளம்.. வங்கதேசமும் நேபாளமும் இலங்கையும் அந்த வெள்ளத்தில் மூழ்கிய கதை மூத்தவர்கள் அறியாததில்லை.
ஆர்ப்பாட்டம் அடங்கவும் அமைச்சர் பதவி நிலைக்கவும் ஒரே தீர்வு நீட் தேர்வின் நிரந்தர நீக்கம்தான்..அரசுக்கு அது பின்னடைவாகிவிடும் என்று பேசப்பட்டால் சமரசத் தீர்வு ஒன்றும் இருக்கிறது. அதுதான் நீட் தேர்வை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது இரண்டில் ஒன்று நாடு எதிர்பார்க்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?