டிஸ்மிஸ் லிஸ்ட்டில் கீர்த்தனா? ஜான் ஆரோக்கியசாமியால் தப்பித்த அமைச்சர் பதவி?
முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளவுள்ள லண்டன் பயணம் முடிந்து திரும்பிய பிறகு, அமைச்சரவையில் முக்கியமான மாற்றங்கள் இருக்கலாம் என கோட்டை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள 100 நாள் ரிப்போர்ட் முதலமைச்சர் விஜயின் பார்வைக்கு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில் சில அமைச்சர்கள் மீது நடவடிக்கை இருக்கலாம் என்ற பேச்சு ஏற்கெனவே அரசியல் வட்டாரத்தில் உலா வருகிறது.
இந்த நிலையில், குறிப்பாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் அமைச்சர் கீர்த்தனாவின் பதவி குறித்துதான் தற்போது ஹாட் டாபிக் உருவாகியுள்ளது.
டிஸ்மிஸ் லிஸ்ட்டில் கீர்த்தனா?
அமைச்சர் கீர்த்தனாவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது குறித்து முதலமைச்சர் விஜய் முதலில் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து எழுந்து வரும் சர்ச்சைகள் மற்றும் அவரது செயல்பாடுகள் தொடர்பான அதிருப்தியே இதற்குக் காரணம் என கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், கீர்த்தனாவுக்கு கட்சிக்குள் இருக்கும் ஆதரவு அவரது பதவிக்கு பாதுகாப்பாக மாறியுள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், இதனால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவுக்கு பதிலாக இலாகாவை மட்டும் மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி போகல... இலாகா மட்டும் மாறுமா?
இதன்படி, தற்போது கீர்த்தனா கவனித்து வரும் தொழில்துறை அவரிடம் இருந்து மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக சமூக நலத்துறை அவருக்கு வழங்கப்படலாம் என்ற பேச்சு கோட்டை வட்டாரங்களில் அடிபடுகிறது.
அதாவது, முதலில் அமைச்சர் பதவியே பறிக்கப்படலாம் என்ற அளவுக்கு சென்ற விவகாரம், தற்போது ‘பதவி தப்பியது... இலாகா மட்டும் மாறுகிறது’ என்ற நிலைக்கு வந்துள்ளதாக தகவல்.
இதற்கிடையே, தவெக அமைச்சர்களின் 100 நாள் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படும் தகவலும் இந்த விவகாரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
லண்டன் விசிட்... திரும்பியதும் அதிரடி?
சட்டசபைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து செப்டம்பர் 10-ம் தேதி முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் பிரிட்டன் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பயணம் முடிந்து விஜய் தமிழ்நாடு திரும்பிய பிறகு, அமைச்சரவை மற்றும் இலாகாக்களில் மாற்றங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கீர்த்தனாவின் அமைச்சர் பதவி உண்மையிலேயே தப்பியதா? ஜான் ஆரோக்கியசாமியின் ஆதரவு அதற்கு காரணமா? தொழில்துறையை இழந்து சமூக நலத்துறைக்கு மட்டும் மாற்றப்படுகிறாரா? என்ற கேள்விகள் தற்போது கோட்டை வட்டார அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
எனவே, லண்டன் பயணத்துக்குப் பிறகு விஜய் எடுக்கப்போகும் முடிவுகள் தவெக அமைச்சரவையில் பலருக்கும் முக்கியமான திருப்பமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?