வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை..!

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவை சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் உலுக்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்... சுனாமி  எச்சரிக்கை..!

வியாழக்கிழமை(ஜூன் 25) மாலை 6 மணி அளவில் (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி) வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 என இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிர்வுகள் வெனிசுலா மட்டுமின்றி கரீபியன் கடல் பகுதியின் பல தீவுகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக கரீபியன் தீவு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பின்னர் நிலைமையை ஆய்வு செய்த அதிகாரிகள் அந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்றனர். 

இந்த பேரிடரால் ஏற்பட்ட சேதம் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கராகஸில் பல அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்ததால் நகரின் பல பகுதிகள் தூசி மண்டலமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டதும் அச்சமடைந்த மக்கள் வீதிகளுக்கு ஓடி தஞ்சமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் தங்களது உறவினர்களை தேடி பலர் கதறியபடி அலைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதற்கிடையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இடிபாடுகளை அகற்றி உயிருடன் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நிலநடுக்கத்தின் தாக்கம் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளையும் பாதித்துள்ளது. வெனிசுலாவின் முக்கிய சர்வதேச நுழைவாயிலாக கருதப்படும் சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் பலத்த சேதமடைந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதேபோல், கடலோர நகரமான லா குவைராவில் உள்ள பல விடுதிகள், கட்டிடங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 4.9 முதல் 6.4 ரிக்டர் அளவிலான 20-க்கும் மேற்பட்ட பிந்தைய நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. இதனால் மக்கள் வீடுகளுக்குள் திரும்பிச் செல்ல அச்சமடைந்து திறந்தவெளி பகுதிகளிலும் சாலைகளிலும் தங்கியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்துள்ளார். மேலும், தேசிய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow