என்னது சூரியனுக்கே வேர்த்திருச்சா?... சட்டசபையில் நடந்த ‘Science Comedy’!

இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வினோத் பேசும்போது, “அனைவருக்கும் சூரியனால் வேர்த்தது. நீங்கள் வந்த பிறகு சூரியனுக்கே வேர்த்துள்ளது” என்று கூறிய கருத்து கவனம் பெற்றுள்ளது.

Aug 12, 2026 - 16:11
என்னது சூரியனுக்கே வேர்த்திருச்சா?... சட்டசபையில் நடந்த ‘Science Comedy’!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித் தீர்மானம் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கான அரசின் பதிலுரை தொடங்கியது.

இதில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் வினோத் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டை ‘வெற்று பட்ஜெட்’ என விமர்சித்திருப்பதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில், “தவெகவின் வேளாண் பட்ஜெட் வெற்று பட்ஜெட் அல்ல; அது விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட்” என்று தெரிவித்தார்.

மேலும், ஆட்சி நடத்துவது தங்களுக்கு தெரியும் என்றும், தங்களது ஆட்சியில் லஞ்சம் இல்லாத நிர்வாகம் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். தமிழ்நாட்டின் இதயம் விவசாயிகளிடமே இருப்பதாக தெரிவித்த அவர், ஓரிரு நாட்களில் தீர்க்கக்கூடிய பிரச்னைகள் என்றால், கடந்த ஆட்சிக் காலத்திலேயே அவை ஏன் தீர்க்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசுக்கு எதிர்க்கட்சிகள் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். விவசாயிகளின் நீண்டகால பிரச்னைகளுக்கு உடனடி தீர்வுகளுடன் தொலைநோக்கு திட்டங்களும் அவசியம் என குறிப்பிட்டார்.

கடுமையான நிதி நெருக்கடி இருந்தபோதிலும், ரூ.6 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். பொது ரகம் மற்றும் சன்ன ரக நெல், கரும்பு உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் உயர்த்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தங்களது அரசின் திட்டங்களை எதிர்க்கட்சிகள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சில திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். திட்டங்களின் பயன்களை மேலும் மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதேபோல், ‘வெற்றி வீடு’ திட்டத்தில் முந்தைய ஆட்சியை விட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனைத்து மாவட்டங்களிலும் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைக் கண்டறிய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 23,399 ஹெக்டேர் பரப்பளவில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையான கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தனது உரையின் இறுதியில், “அனைவருக்கும் சூரியனால் வேர்த்தது. ஆனால், நீங்கள் வந்த பிறகு சூரியனுக்கே வேர்த்தது” என்று கூறி அமைச்சர் தனது பதிலுரையை நிறைவு செய்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். வேளாண்துறை அமைச்சர் நீண்ட நேரம் விரிவான விளக்கத்தை அளித்ததாகவும், அதனை அனைவரும் கவனமாகக் கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரின் பதிலுரையின் இறுதியில், “சூரியனுக்கே வேர்த்தது” என்ற கருத்து இடம்பெற்றதை சுட்டிக்காட்டிய ஓ.பன்னீர்செல்வம், இதுவரை யாராலும் நெருங்க முடியாத அளவுக்கு சூரியன் இருப்பதாகக் குறிப்பிட்டார். பல்வேறு விஞ்ஞானிகள் முயற்சி செய்தபோதிலும், அங்கு ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow