"தமிழ் படிக்கத் தெரியல" ....... சரணடைந்த அமைச்சர் மரிய வில்சன் !

சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, தமிழைத் தவறாகப் படித்ததாக அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஆவேசமாக பதிலளித்த மரிய வில்சன், இன்று நடைபெற்ற கூட்டத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டு, அதைத் திருத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Aug 12, 2026 - 15:14
"தமிழ் படிக்கத் தெரியல" .......  சரணடைந்த அமைச்சர் மரிய வில்சன் !
Mary Wilson Minister

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல் நிதிநிலை அறிக்கையை ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிதியமைச்சர் மரிய வில்சனும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத்தும் தாக்கல் செய்தனர்.

அதன் பிறகு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மரிய வில்சன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது தமிழை வாசிக்கத் தடுமாறியதாகவும், ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்ததாகவும் திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் குற்றம்சாட்டினார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் மரிய வில்சனின் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருந்தாலும், தமிழில் பல சொற்களைப் பேசாமல் விட்டுவிட்டதாகவும், அவரது வாசிப்பு இலக்கணப் பிழைகளுடன் அமைந்ததாகவும் கூறினார். மேலும், இதனை தான் குறையாகவோ அல்லது குற்றமாகவோ சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கு ஆவேசமாகப் பதிலளித்த அமைச்சர் மரிய வில்சன், "சார், நான் கூடைப்பந்து வீரர். ஆஃபென்ஸ், டிஃபென்ஸ் இரண்டுமே எப்போது, எங்கு விளையாட வேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் கத்தினீர்கள் என்றால் நானும் கத்த முடியும். 25 வருடமாக கல்வித் துறையில் இருந்திருக்கிறேன். என்னுடைய கம்யூனிகேஷன் எல்லாமே ஆங்கிலம்தான். கொஞ்ச நாளாகவே உருவக் கேலி செய்கிறார்கள், சாதி ரீதியாகப் பேசுகிறார்கள், பெண்கள் தொடர்பாகப் பேசுகிறார்கள். இப்போது மொழி ரீதியாகவும் வந்துவிட்டார்கள்.

எனக்கு ஒரு மொழியை கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதை பல பேர் எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது. நான் பைபிள் படித்திருக்கிறேன். பிறப்பால் கிறிஸ்தவர். உங்களுக்கு அந்த மொழிதான் வேண்டுமென்றால், நான் உங்களுக்காக மாற்றிக்கொள்ள முடியாது. என்னுடைய ஸ்டைல் இதுதான். அதனை மாற்றிக்கொள்ள முடியாது. கேலி செய்கிறீர்களா?" என்று ஆவேசமாகப் பேசினார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய மரிய வில்சன், தமிழ் பேசுவதில் தனக்கு தடங்கல் இருப்பதாகவும், அன்று சற்று ஆவேசப்பட்டதும் உண்மைதான் என்றும் ஒப்புக்கொண்டார். தமிழ்தான் தனக்கும் தாய்மொழி என்று குறிப்பிட்ட அவர், சட்டப்பேரவையில் தங்களுக்கு இது முதல்முறை என்பதால், நிச்சயமாக தவறுகளைத் திருத்திக்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், "வளர்ந்தது திருவாரூர், பிறந்தது பாண்டிச்சேரி, படித்தது சென்னை, தத்தெடுத்தது ஆர்.கே. நகர். 4 இடங்களையும் சுற்றி சுற்றி வந்துள்ளேன். இதுதான் சட்டப்பேரவையில் எங்களுக்கு முதல்முறை. உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வோம். நிச்சயமாக வரக்கூடிய நாட்களில் தவறுகளைத் திருத்திக்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow