விஜய் சைகையின் ரகசியம் என்ன? ஸ்டாலினை BULLY செய்தாரா முதல்வர்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், அவர் செய்த ஒரு குறிப்பிட்ட சைகையாலும் கவனம் பெற்றுள்ளது. 

Sep 7, 2026 - 17:33
விஜய் சைகையின் ரகசியம் என்ன? ஸ்டாலினை BULLY செய்தாரா முதல்வர்?

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்தார். தற்போதைய பிரச்னைகளுக்கு கடந்த சில மாதங்களின் ஆட்சியை மட்டும் காரணமாகக் கூற முடியாது என்றும், நீண்ட காலமாக தமிழ்நாட்டில் நிலவி வரும் சில பிரச்னைகளுக்கும் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்பிறகு, திமுக ஆட்சிக் காலத்தில் எழுந்ததாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்கள் மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை தனது அரசியல் தாக்குதலுக்கு விஜய் பயன்படுத்தினார். முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது பதவியை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விவாதம் ஸ்டாலின் பக்கம் திரும்பியபோதுதான் அந்த சர்ச்சைக்குரிய தருணம் நிகழ்ந்தது.

“மிசாவில் என்ன நடந்தது என்று தெரியும்...” என்று ஸ்டாலினை நோக்கிய அரசியல் விமர்சனத்தை முன்வைத்த விஜய், அதே நேரத்தில் முகத்தை நோக்கி கையை வைத்து ஒரு சைகை செய்தார்.

அவ்வளவுதான்... விஜயின் பேச்சை விட, அந்த ஒரு சைகைதான் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. 

ஸ்டாலினை கேலி செய்யும் நோக்கத்தில்தான் விஜய் அந்த உடல்மொழியை பயன்படுத்தினாரா? அல்லது உரையின் தீவிரத்தில் தன்னிச்சையாக வெளிப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான சைகையா? என்பதுதான் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. 

ஒரு தரப்பினர், இது வெறுமனே இயல்பான உடல்மொழி அல்ல என்றும், ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் உருவகேலி செய்யும் வகையில் விஜய் அந்த சைகையை செய்திருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, மிசா காலத்தில் சிறையில் இருந்தவர்கள் எதிர்கொண்டதாகக் கூறப்படும் சித்ரவதைகளால் ஸ்டாலினுக்கு அடிப்பட்ட்து. அந்த துன்பங்களை கேலி செய்யும் வகையில் இந்த சைகையை விஜய் செய்தார் என்று கூறப்படுகிறது. 

மறுபக்கம், விஜய் தனது உரையை திட்டமிட்டு தயாரித்து பேசியிருந்தாலும், குறிப்பிட்ட அந்த நேரத்தில் அவர் உணர்ச்சிவசப்பட்டு இயல்பாகவே அந்த சைகையை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, ஒரு சில நொடிகளின் உடல்மொழியை மட்டும் வைத்து அவர் ஸ்டாலினை அவமதிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டார் என முடிவு செய்ய முடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், விஜய் - திமுக இடையேயான அரசியல் மோதல் ஏற்கெனவே உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்த சைகை புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

சட்டப்பேரவையில் விஜய் பேசும் விதம், திமுக தலைவர்களை விமர்சிக்கும் தொனி, குறிப்பாக ஸ்டாலினை குறிவைத்து அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் குறித்து ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ”அப்பாவை காணோம்”, ”வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை?” என வார்த்தைகளால் ஸ்டாலினை தாக்கி வந்த விஜய், சைகைகளாலும் தாக்கி வந்தார் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், விஜய் திமுகவை அரசியல் ரீதியாக கடுமையாக ‘BULLY’ செய்ய முயற்சிப்பதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இந்த சைகையும் இணைந்துள்ளது.

அது கேலியா? கோபத்தின் வெளிப்பாடா? அல்லது வெறும் தன்னிச்சையான உடல்மொழியா?

முதலமைச்சர் விஜய் செய்த அந்த சில நொடிகளின் சைகைக்கு பின்னால் இருந்த உண்மையான நோக்கம் என்ன என்பது அவருக்குத்தான் தெரியும். ஆனால், அந்த சைகை மட்டும் தமிழ்நாடு அரசியல் களத்தில் இன்று நீண்ட விவாதத்தை உருவாக்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow