அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவால் அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Aug 11, 2026 - 21:11
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளிலேயே தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து வருகிறது. இதனை அனைவரும் நம்பினோம்.
ஆனால் தற்போது அரசு பணி நியமனங்களில் முதலமைச்சர் விஜய்க்கு நெருக்கமான திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சத்தமில்லாமல், சைலண்டாக அரசு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோயில் அறங்காவலர் நியமனக் குழுவில் உறுப்பினராக, முதலமைச்சர் விஜய்யின் ‘கோட்’ திரைப்பட தயாரிப்பாளரும், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவருமான அர்ச்சனா கல்பாத்தி அகோரம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரும், கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவருமான வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், முதலமைச்சரின் தனிச் செயலாளராக, முதல்வர் விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவராக, முதலமைச்சர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் அன்புக்குரியவர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ராம்குமார் ஆகியோரும் அரசின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல முதலமைச்சர் விஜய்யின் அன்புக்குரியவராகக் கூறப்படும் திரிஷா மேடம் அவர்களை எப்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமித்து அறிவிப்பு வெளியாகும் என்று அதிர்ச்சியோடும், ஆவலோடும் தமிழகம் காத்திருக்கிறது” என ஆர்.பி. உதயகுமார் பேசியிருந்தார்.
இந்நிலையில், மதுரை மாநகர் முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. நடிகை திரிஷா குறித்து ஆர்.பி. உதயகுமார் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரையின் பல்வேறு பகுதிகளில் திரிஷா நற்பணி மன்றத்தினர் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்களில் நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள கண்டன போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மதுரையில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராகவும் திரிஷா நற்பணி மன்றம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.