நெல்லை ஆட்சியர் நீடித்தால் திமுக 50,000 வாக்குகளை இழக்கும் - செயற்குழுக் கூட்டத்தில் திமுகவினர் குமுறல்

பொதுமக்களின் சிறிய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்

Feb 15, 2024 - 07:46
Feb 15, 2024 - 07:56
நெல்லை ஆட்சியர் நீடித்தால் திமுக 50,000 வாக்குகளை இழக்கும் - செயற்குழுக் கூட்டத்தில் திமுகவினர் குமுறல்

நெல்லையில் தற்போது பதவியில் இருக்கும் ஆட்சியர் நீடித்தால், திமுக 50,000 வாக்குகளை இழக்கும் என மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் குமுறியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் தேதியை எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் காத்திருக்கிறது. இன்னும் 15 முதல் 20 தினங்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு அணிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பேசிய நிர்வாகி ஒருவர்,  ‘கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கூடுதல் வாக்குகள் பெற்று  வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் உழைக்க வேண்டும்.ஆனால் தற்போதைய ஆட்சியரை மாற்ற வேண்டும். அவர் தொடர்ந்து நீடித்தால் 50,000 வாக்குகளை நாம் இழக்க நேரிடும்’ எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

உள்ளாட்சி நிர்வாகங்களில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக பிரதிநிதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்படுவதை இதுபோன்ற நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது. ஆளும் கட்சியினரே மாவட்ட ஆட்சியர் நீடித்தால் கட்சிக்கு 50,000 வாக்குகள் குறையும் என பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன்,  ‘பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் நமது கட்சி வசமே உள்ளது. நமது தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்களின் சிறிய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அதனை சரிசெய்து கொடுக்க வேண்டும். வாக்கு சேகரிக்க செல்லும்போது, பொதுமக்கள் குறை கூறும் அளவில் இருக்கக்கூடாது’ என பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow