திருவையாறு ஐயாறப்பர் கோயில் திருவிழா... பொம்மை போட்ட பூ.. நெரிசலில் சிக்கி மயங்கிய பெண்
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் சப்தஸ்தான பெருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவையாறில் அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த கோயிலின் சப்தஸ்தான பெருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பொம்மை பூ போடும் நிகழ்வு நேற்று (ஏப்ரல் 26) இரவு நடைபெற்றது. இவ்விழாவை காண திருவையாறு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் கீழ ராஜ வீதி தேரடி முன்பு திரண்டனர். ஒரே இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் தோளில் சுமந்து சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டுக்கடங்காத கூட்டத்தால் இளைஞர்கள் இடையே வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டது. இந்த நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
What's Your Reaction?