கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்திற்கு செல்லும்.. டிரம்ப் கணிப்பு!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் பெருமளவில் குறையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு பயணிக்கும் மிக முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணைப் பகுதியில், அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்தச் சூழலில், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 97 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஐந்து நாட்களில் 9 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 19 சதவீதமும் கூடி உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், விரைவில் விலை குறையும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளது உலக நாடுகளை உற்றுநோக்க செய்துள்ளது.
டிரம்ப் கணிப்பு
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறும்போது, மற்ற அனைத்துப் பொருட்களின் விலைகளும் சரிவதைப் போல கச்சா எண்ணெய் விலையும் மிகக் கடுமையாகக் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஒரு கேலன் எரிபொருள் விலை 3 டாலராகக் குறைந்து, இறுதியாக 2 டாலருக்கும் கீழ் செல்லும். இவை அனைத்தும் மிக விரைவாகவே நடக்கும். அதேநேரத்தில், ஈரான் எக்காரணத்தைக் கொண்டும் அணு ஆயுதத்தைப் பெற அனுமதிக்க மாட்டோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?