செல்லாக் காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை - ஆர்.பி. உதயகுமாரை சாடிய அண்ணாமலை

தமிழக அரசு கேட்டுள்ள 38 ஆயிரம் கோடி வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும்

Feb 9, 2024 - 07:02
Feb 9, 2024 - 18:28
செல்லாக் காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை - ஆர்.பி. உதயகுமாரை சாடிய அண்ணாமலை

செல்லாக் காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்

திருவள்ளூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், செல்லாக் காசாக இருந்து வரும் ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை எனக் கூறினார். பணத்தைக் கொள்ளையடித்து ஐந்தாண்டுகளுக்கு மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகள், தாரக மந்திரம் எல்லாம் தனக்குத் தெரியாது எனவும் மீடியோ வெளிச்சத்திற்காக தன்னைப் பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு பதில்சொல்ல விரும்பவில்லை எனவும் கூறினார்.

கடுமையான வார்த்தையை தனக்கும் பயன்படுத்த தெரியும் எனக் கூறிய அவர், அதற்கான அவசியம் இல்லை என நினைப்பதாக தெரிவித்தார். அவர்களுக்கு தன் மீது கோபம் வருவதால், தனது கட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதற்கான அர்த்தம் எனவும் அவர் கூறினார். மேலும், தன்னை திட்ட திட்ட பாஜகவும், தானும் சரியான பாதையில் செல்வதற்கான குறியீடாக எடுத்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை - அருமையாக அனைத்தும் கொடுத்து வருகிறார் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய வெள்ள நிவாரண நிதியை தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறைக்கு மத்திய அரசு அளித்த ரூ.1,300 கோடியை செலவு செய்யாமல் வைத்திருப்பதாகவும், தமிழக அரசு கேட்டுள்ள ரூ.38,000 கோடி வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும் எனவும் அவர் கூறினார்.

எந்த மாநிலத்திற்கும் வெள்ள நிவாரண நிதியை அளிப்பதற்கு மத்திய அரசு குறை வைக்கவில்லை எனவும் தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் தனித்து நின்றால் 21% வாக்குகள் பெற முடியும் எனவும் அவர் கூறினார். இந்தியா டுடே, சி வோட்டர் கருத்துக்கணிப்பு 16 சதவீதம் வாக்குகள் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தனித்து நின்றால் பெற முடியும் என கூறியிருப்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனித்து 30 சதவீதம் வாக்குகள் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தலில் 23 சதவீதம் வாக்குகள் வந்தாலே அவை சீட்டுகளாக மாறும்போது, 30 சதவீதம் வாக்குகள் பெற்றாலே வேட்பாளர்கள் வெல்ல முடியும் எனவும் அவர் கூறினார். அதிமுக கதவுகள் மூடப்பட்டு இருப்பதாக ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் கதவை உடைத்து பாஜகவில் இணைந்துள்ளதாக அண்ணாமலை கூறினார். நாங்கள் கதவைத்தட்டி எங்கேயும் போக விரும்பவில்லை; அவர்களே கதவைத் திறந்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow