தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் சட்டத்திற்குட்பட்டு நடத்தப்பட வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மனுதாரர் மேற்கொள்ளலாம்

Jan 24, 2024 - 15:43
Jan 25, 2024 - 11:50
தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் சட்டத்திற்குட்பட்டு நடத்தப்பட வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் சட்டத்திற்குட்பட்டு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி மௌரியாவிற்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராமசபை கூட்ட விதிகளின்படியும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (உழைப்பாளர் தினம்), ஆகஸ்ட் 15(சுதந்திர தினம்), அக்டோபர் 2(காந்தி பிறந்த தினம்) என நான்கு முறை, கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டிருந்த நிலையில், கரோனா தொற்றை காரணம் காட்டி, அந்த கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.இதை எதிர்த்து, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மௌரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் நீதி மய்யம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், எந்த முக்கிய காரணமும் இல்லாமல் கிராமசபை கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது என வாதிட்டார்.

அரசு தரப்பில், அரசு பிளீடர் P.முத்துக்குமார் ஆஜராகி கரோனா ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக திரும்ப பெறப்படாத நிலையிலேயே 2020ஆம் ஆண்டு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், அதற்கடுத்த ஆண்டுகளில் கிராம சபை கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதாக தெரிவித்தார்.பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கிராம சபை கூட்டங்கள் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்றும், அவற்றை நடத்துவதில் விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மனுதாரர் மேற்கொள்ளலாம் என கூறி வழக்கை முடித்துவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow