கிருஷ்ணகிரியில் பரபரப்பு போதை ஆசாமிகள் வெறிச்செயல் தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி
சில ஆட்களை கூட்டிக்கொண்டு வந்த அந்த போதை இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டதோடு, இருவரையும் கொடூர முறையில் தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுபோதையில் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞரை, இருசக்கர வாகனத்தை வைத்து ஏற்றி மிக கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இளைஞரின் படுகொலைக்கு நியாயம் கேட்டு கிராம மக்கள் திரண்டதால், காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தின்ன கழனி கிராமத்தில் முனியப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் அருகே புதர் நிறைந்த இடங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் சிலர் மது குடிப்பதும், போதையில் பாட்டில்களை போட்டு உடைப்பதும், தகராறு செய்வதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், கோவிலுக்கு அருகே வசிக்கும் சின்னத்தம்பி என்பவர், போதையில் ரகளை செய்த இளைஞர்களை தட்டிக் கேட்டு இருக்கிறார். அப்போது, சின்னத்தம்பியை தாக்கிய அந்த போதை இளைஞர்கள், சத்தம் கேட்டு வந்த அவரது மகன் வெற்றியையும் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கின்றனர்.
ஆனால், சிறிது நேரத்தில் இன்னும் சில ஆட்களை கூட்டிக்கொண்டு வந்த அந்த போதை இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டதோடு, இருவரையும் கொடூர முறையில் தாக்கியுள்ளனர். இதனால், வெற்றி தனது நண்பரான கார்த்திக்கிற்கு போன் செய்து, தங்களை சிலர் தாக்கிவிட்டு தப்பிச் செல்வதாகவும், அவர்களை மடக்கி பிடிக்க வேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.
உடனடியாக, தனது தந்தை தேவராஜ் உடன் சென்ற கார்த்திக் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற போதை இளைஞர்களை தடுத்து நிறுத்தினார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், தேவராஜையும் அவரது மகன் கார்த்திகையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்பு கார்த்திக்கின் கால்களின் இடையே உயிர் நாடியில் இருசக்கர வாகனத்தை ஏற்றியுள்ளனர். இதில் நிலைகுலைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார் காயமடைந்த தேவராஜை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த கார்த்திக்கின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் போதை ஆசாமிகள் தொடர்ந்து இதுபோன்ற ரகளையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள், கார்த்திக்கின் படுகொலைக்கு நியாயம் கேட்டு காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கஞ்சா போதையில் இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூறியிருக்கிறார். ஆனால், மது போதையோ, கஞ்சா போதையோ, போதை ஆசாமிகளின் அட்டூழியத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?