"கருணாநிதியின் அனுமதியுடனே கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுள்ளது" - RTI தகவலை புட்டு புட்டு வைத்த அண்ணாமலை...

கச்சத்தீவை கொடுப்பதற்கு ஒரு மாதம் முன்பாகவே கருணாநிதியிடம் அனுமதியைப் பெற்று கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறுகிறார்.

Apr 1, 2024 - 19:58
"கருணாநிதியின் அனுமதியுடனே கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டுள்ளது" - RTI தகவலை புட்டு புட்டு வைத்த அண்ணாமலை...

கச்சத்தீவை கொடுப்பதற்கு ஒரு மாதம் முன்பாகவே அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் அனுமதியைப் பெற்று கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 1) செய்தியாளர்களைச் சந்தித்து கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவல்களை விவரித்தார். அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், எங்கள் போராட்டத்தையும் பொருட்படுத்தாமல் கொடுத்துவிட்டதாக இத்தனை காலமாக திமுக தலைவர்கள் கட்டுக்கதைகளை சொல்லி வந்தார்கள் என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், கச்சத்தீவு தொடர்பாக ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) மூலம் பெறப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கூறினார். அதில், "அப்போதைய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த கேவல் சிங் மற்றும் வரலாற்று பிரிவு இயக்குநராக இருந்த வி.கே.பாசு ஆகிய இருவரும், அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றது." 

கச்சத்தீவை கொடுப்பதற்கு ஒரு மாதம் முன்பாகவே கருணாநிதியிடம் அனுமதியைப் பெற்று கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது என கூறிய அண்ணாமலை, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பதை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போட முடியுமா? என்று பேச்சுவார்த்தை நடத்த வந்தவர்களிடம் கருணாநிதி கேட்டுள்ளார் என்றும், அது முடியாது என்று தெரிய வந்தவுடன், தமிழ்நாட்டில் சிறிதாக கண்டன போராட்டம் மட்டும் நடத்திக் கொள்கிறோம் என்றும், இதுதொடர்பாக வரும் அரசியல் சிக்கல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று வெளியுறவுத்துறை செயலாளரிடம் கருணாநிதி கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

1974 ஆம் ஆண்டு காங்கிரசும், திமுகவும் திட்டமிட்டுத் தான் கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்தது தெரிகிறது என்றும், இதில் திமுகவின் பங்களிப்பும் இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்தார். 

கச்சத்தீவை கொடுத்த பிறகு, இந்தியாவின் எல்லை சுறுங்கி இருக்கிறது. அதற்கு காரணம் மாபெரும் துரோகம் செய்த காங்கிரஸ், திமுகதான். எப்போதெல்லாம் இந்த இரண்டு கட்சிகளும் சேருகிறார்களோ, அப்போதெல்லாம் இந்தியாவின் பகுதி எதாவது கொடுக்கப்பட்டிருக்கும் என்று குற்றம்சாட்டினார். 

2014 ஆம் ஆண்டுக்கு முன்பு நூற்றுக்கணக்கான மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு திமுக தான் தார்மீகப் பொருப்பேற்க வேண்டும். இப்போது ஏன் தமிழக பாஜக கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தி வருகிறது. அதன் காரணமாகவே இப்போது இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ளோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow