சென்னையில் குழந்தை கடத்தல் ஏதும் நடக்கவில்லை... காவல்துறை விளக்கம்...

Mar 9, 2024 - 17:53
சென்னையில் குழந்தை கடத்தல் ஏதும் நடக்கவில்லை... காவல்துறை விளக்கம்...

குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் சென்னையில் குழந்தை கடத்தல் எதுவும் நடக்கவில்லை என்றும் கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து ஆண்கள் சுற்றி வருவதாகவும், சிறுவர், சிறுமிகளின் உடல் உறுப்புகளை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 6 வயது சிறுவன் தனது வீட்டு வாசவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒருவர் சிறுவனின் கையை பிடித்து இழுத்து தூக்க முயன்றதாக அங்கு விளையாடிக்கொண்டிருந்த மற்ற குழந்தைகள் சிறுவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த ஆசாமியை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அந்த நபரை குழந்தையை கடத்த முயன்றதாக கூறி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் பரவிய குழந்தை கடத்தல் வதந்தி குறித்து கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜன் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து புகார் வந்ததையடுத்து  உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதாகவும், 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். விசாரணையில் மதுபோதையில் இருந்த நபர் சிறுவனை பின்தொடர்ந்து சென்றாரே தவிர, கடத்தும் முயற்சி எதுவும் நடக்கவில்லை என்று கூறினார். மேலும் போலீசாரிடம் விளக்கம் பெறாமல் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று தர்மராஜன் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow