இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி... எங்கெல்லாம் செல்கிறார் - முழு விவரம் இதோ
பிரதமரை வரவேற்க தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று தமிழ்நாடு வருகிறார்.பிரதமரின் வருகையால் திருப்பூரில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராகவும், பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்திலும், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தை மேற்கொண்டார்.அதன் நிறைவு விழா திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது.இதற்காக இன்று காலை 9 மணி அளவில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனது பயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார்.
இதைத்தொடர்ந்து பல்லடத்தில் உள்ள மாதப்பூரில் நடக்கும் ‘என் மக்கள். என் மக்கள்’ நிறைவு விழா பொதுக்கூட்டத்திற்கு செல்கிறார். விழாவில், பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் ஜி.கே.வாசன், ஐஜேகே பாரிவேந்தர், புதிய நீதி கட்சி ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் கோவை சூலூர் விமான படை தளத்திற்கு செல்கிறார். பின்னர் 2.30 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார். அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார். பின்னர் பிரதமர் மோடியும், அண்ணாமலையும் வாகனத்தில் ஊர்வலமாக பொதுக்கூட்ட மேடைக்கு செல்கின்றனர்.
அதன்பின்னர் பிரதமர் மோடி மதியம் 2:45 முதல் 3:45 மணி வரை ‘என் மண், என் மக்கள்’ நிறைவுவிழாவில் சிறப்புரையாற்றுகிறார். விழா முடிந்ததும், ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். பின்னர் மதுரையில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவு மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று தங்குகிறார்.
அதன் பிறகு நாளை காலை 9:30 மணிக்கு மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி சென்றடைகிறார். அங்கு காலை 9:45 முதல் 10:30 வரை அரசின் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.பின்னர் 11:10க்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி செல்கிறார். அங்கு நண்பகல் 11:15 மணி முதல் 12:15 மணி வரை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.பின்னர் 12:30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையால் திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கோவை மற்றும் திருப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் லட்சக்கணக்கான பாஜகவினர் கூடுவார்கள் என்பதால் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமரை வரவேற்க தமிழ்நாடு பாஜக சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய பிரமாண்ட பொதுக்கூட்டம் என்பதால் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?