தவெகவிற்கு எதிரான எம்எல்ஏக்கள் குதிரை பேரம் வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
தமிழக சட்டசபையில் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 13ம் தேதி தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் தவெக அரசு 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து எளிதில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதற்காக தவெக குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாகக் கூறி, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ''ஓட்டெடுப்பில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகளிடையே ரூ.1,000 கோடி அளவுக்கு குதிரை பேரம் நடந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். தவெக அரசுக்கு எதிரான இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி வி.மோகனா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குதிரை பேர விவகாரம் தொடர்பான மனுவை பொது நல வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்ததோடு, மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
What's Your Reaction?













