தமிழ்க் கடவுள் முருகன் மீது ஆணை.. மயிலாடுதுறை எம்.பி.யின் பதவியேற்பு.. திரும்பி பார்த்த மக்களவை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற சுதா ராமகிருஷ்ணன், தமிழ் கடவுள் முருகன் மீது உளமாற என கூறி பதவியேற்றது மக்களவையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் வெற்றி பெற்ற அனைவரும் இன்று இடைக்கால சபாநாயகர் பருத்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். சசிகாந்த் செந்தில் பதவியேற்ற போது,வாழ்க வையகம், வாழ்க தமிழ், ஜெய் ஜெகத். சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடிகள் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள். ஜெய் பீம் என்று முழக்கமிட்டார். அவர் இவ்வாறு சொன்ன உடன் பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பதவியேற்ற பின்னர் `வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, வளர்க இந்தியா, ஓங்குக ஒற்றுமை என்று கூறி பதவியேற்றார். மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா ராமகிருஷ்ணன்,தனது கையில் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியவாறு, முருக கடவுளை கூறி பதவியேற்றது கவனம் பெற்றுள்ளது.
"மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலிருந்து மக்கள் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுதா ராமகிருஷ்ணன் எனும் நான், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள , இந்திய அரசியலமைப்பின்பால், உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளும் பணியை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் மீது உளமாற உறுதி கூறுகிறேன். தமிழ் மக்கள் வாழ்க! இந்தியாவின் நம்பிக்கை நாயகன் ராகுல் காந்தி வாழ்க! ஜோடோ ஜோடோ பாரத் ஜோடோ” என தெரிவித்து மக்களவை உறுப்பினராக சுதா ராமகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார்.
What's Your Reaction?