நாட்டார் தெய்வத்தைக் களமாகக் கொண்டு உருவாகி வரும் ‘மாடன்’ திரைப்படம்

நாட்டார் தெய்வமான சுடலை மாடன் கோவில் திருவிழாவைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகி வருகிறது ‘மாடன்’ திரைப்படம்.  இப்படத்தினை அறிமுக இயக்குநர் தங்கபாண்டி இயக்குகிறார். 

Oct 20, 2024 - 00:34
நாட்டார் தெய்வத்தைக் களமாகக் கொண்டு உருவாகி வரும் ‘மாடன்’ திரைப்படம்
maadan movie

தமிழ்த்திரைப்படங்களில் கிராமியப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். இன்றைக்கு அதிவேகமாக கிராமங்கள் நகரங்களாகிக் கொண்டிருக்கும் உலக சூழலில் கிராமியப் படங்களுக்கான வரவேற்பு மேலும் அதிகரித்திருக்கிறது. அறிமுக இயக்குநரான தங்கபாண்டி திருநெல்வேலி மாவட்டத்து கிராமப் பின்னணியில் ‘மாடன்’ என்கிற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் குறித்து அவர் கூறுகையில்...

“கரிசல் நிலம்தான் கதைக்களம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் நாட்டார் தெய்வமான சுடலைமாடன் கோவிலில் பல ஆண்டுகளாக கோவில் திருவிழா நடைபெறாமலேயே இருக்கிறது. தனது விருப்புக்குரிய தெய்வத்துக்கு திருவிழா நடத்திக் காட்ட வேண்டும் என்கிற முனைப்போடு நாயகன் களம் இறங்குகிறான்.

அதற்கான முயற்சியில் இறங்கும்போது பல எதிர்ப்புகளை அவன் சந்திக்க நேர்கிறது. பல பிரச்னைகளை அவன் எதிர்கொள்ளத் துணிகிறான். அவனுடைய இந்த முயற்சிக்கு நாயகியும் துணை நிற்கிறாள். இதன் விளைவாக இருவருக்கும்  இடையில் பிரச்னைகள் ஏற்படுகிறது.  அந்தத் தடைகளைத் தாண்டி அவன் கோவில் திருவிழாவை நடத்தினானா? என்கிற கருவைக் கொண்டுதான் ‘மாடன்’ என்கிற இத்திரைப்படத்தினை எடுத்திருக்கிறோம். 

கிராமத்து வாழ்க்கை மீதான ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும். இத்திரைப்படம் அந்த ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தின் கிராமத்தை அப்படியே கண் முன் நிறுத்துவதாய் இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு எல்லைச்சாமி உண்டு. அதற்கு ஒரு வரலாறும் உள்ளது. சுடலைமாடனின் தொல்கதையையும் சொல்லும் விதமாக திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக இத்திரைப்படத்தை  இயக்கி இருக்கிறேன். கிராமத்து வாழ்க்கையை விரும்புகிற அனைவருக்கும் இத்திரைப்படம் நிச்சயம் பிடிக்கும் ” என்கிறார் இயக்குநர் தங்கபாண்டி. 

இந்த ‘மாடன்’ திரைப்படத்தை தெய்வா புரொடக்சன்ஸ் சார்பில் சிவபிரகாசம் உதயசூரியன் தயாரிக்கிறார். இவர் கப்பலில் கேப்டனாகப் பணி புரிந்தவர் சினிமா மீது கொண்டுள்ள ஈர்ப்பால் இப்படத்தினைத் தயாரிக்கிறார். நாயகனாக கோகுல் கௌதம் இத்திரைப்படத்தில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஷார்மிஷா நடிக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் டாக்டர் சூரியநாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஸ்ரீ பிரியா ஆகியோருடன்,  திருநங்கை ரஸ்மிதாவும் நடித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow