“பசங்க கூட என்ஜாய்மென்ட்… ஒரு ஆர்வத்துல பண்ணிட்டேன்..” விஜய்ணாவிடம் மன்னிப்புக் கேட்ட அஜித் ரசிகர்!
அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது தீனா, பில்லா திரைப்படங்கள் ரீ-ரிலீஸாகின. அப்போது காசி தியேட்டரில் விஜய்யின் கில்லி போஸ்டரை கிழித்த அஜித் ரசிகர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் நேற்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அஜித்தின் தீனா, பில்லா படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. மங்காத்தா, அமர்க்களம் படங்களும் ரீ-ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீனாவும் பில்லாவும் மட்டுமே வெளியாகின. இரு வாரங்களுக்கு முன்னர் விஜய்யின் கில்லி ரீ-ரிலீஸாகி சக்கைப் போடு போட்டன. இதனால் நேற்று ரீ-ரிலீஸான தீனா, பில்லா படங்களை அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடித் தீர்த்தனர்.
குறிப்பாக சென்னை ரோகிணி தியேட்டரில் தீனா திரையிடப்பட்ட போது அஜித் ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரித்தனர். தியேட்டர் உள்ளேயே ரசிகர்கள் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை அடங்கும் முன்னர் சென்னை காசி தியேட்டரிலும் அஜித் ரசிகர் ஒருவர் செய்த சம்பவம் வைரலானது. ரீ-ரிலீஸான தீனா படத்தை நண்பர்களுடன் பார்க்கச் சென்ற எபினேஷ் என்பவர், அங்கிருந்த விஜய்யின் கில்லி போஸ்டரை தாறுமாறாக கிழித்தெறிந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால், விஜய் ரசிகர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். இதனையடுத்து கில்லி போஸ்டரை கிழித்த அஜித் ரசிகரை போலீஸார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் விஜய்யிடமும் அவரது ரசிகரிடமும் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தீனா படம் பார்க்க சென்றதாகவும், அப்போது பசங்களுடன் ஒரு ஆர்வத்தில் பக்கத்தில் இருந்த கில்லி பட போஸ்டரை பைக் சாவியை வைத்து கிழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், “இதன் மூலமா அண்ணன் விஜய்யிடமும் தமிழக வெற்றிக் கழக நண்பர்களுக்கும் என்னுடைய மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் இதுபோல தவறுகள் செய்யமாட்டேன்னு தலை வணங்கி மன்னிப்புக் கேட்டுக்கிறேன்” என பேசியுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவத்துக்கு ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. விஜய்யும் அஜித்தும் நண்பர்களாக இருந்தாலும் இருவரது ரசிகர்களும் எதிரும் புதிருமாக சம்பவங்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?