ரொனால்டோ - ஜார்ஜினா திருமணம்: வீட்டிலேயே எளிமையாக நடந்த விழா..!
கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மாடல், தொழில்முனைவோர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமணம் செய்து கொண்டதாக இருவரும் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஜார்ஜினா ரோட்ரிகஸும் சுமார் 10 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வந்த நிலையில், தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.
இருவரும் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் முதன்முறையாக சந்தித்தனர். அந்த சந்திப்பு பின்னர் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த ஜோடிக்கு, 2017ஆம் ஆண்டு அலானா மார்டினா என்ற மகள் பிறந்தார். 2022ஆம் ஆண்டு பெல்லா எஸ்மரால்டா என்ற மற்றொரு மகளும் பிறந்தார்.
இதற்கு முன்பே ரொனால்டோவுக்கு வாடகைத் தாய் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர் மற்றும் இரட்டைக் குழந்தைகளான மேட்டியோ, ஈவா மரியா ஆகியோர் பிறந்திருந்தனர். தற்போது ஐந்து குழந்தைகளையும் ரொனால்டோவும் ஜார்ஜினாவும் இணைந்து வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இவர்களின் திருமணம் ஆகஸ்ட் 11ஆம் தேதி போர்ச்சுகலின் காஸ்காய்ஸில் உள்ள வீட்டில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. குழந்தைகளும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.
திருமணம் குறித்து பேசிய ஜார்ஜினா, சிறுவயதில் பிரம்மாண்டமான திருமணம் குறித்து கனவு கண்டதாகவும், ஆனால் தற்போது தனது துணைவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டிலேயே எளிமையான, நெருக்கமான முறையில் திருமணம் செய்து கொள்வதையே விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
காதல் உறவாக தொடங்கி, குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ரொனால்டோ - ஜார்ஜினாவின் 10 ஆண்டுகால பயணம் தற்போது திருமணத்தில் புதிய அத்தியாயத்தை எட்டியுள்ளது.
திருமணத்துக்குப் பிறகு ரொனால்டோ புதிய கால்பந்து சீசனுக்காக அல்-நஸ்ர் அணியுடன் இணைந்துள்ளார். மறுபுறம், ஜார்ஜினா தனது மாடலிங் பணிகளுடன் குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.
இதற்கிடையே, தனது கால்பந்து வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரலாம் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குள் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள அவர், கால்பந்தில் இருந்து விலகுவதற்கு முன்பு சிறப்பான தடத்தை விட்டுச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?



