‘Live Now, Pay Later’ .. Reserve Bank-ஐ அலறவிட்ட GenZ.. என்ன ப்ரோ சொல்ற? 

இந்தியாவில் இளம் தலைமுறையினரிடையே சேமிப்பை விட கடன் பெற்று உடனடி தேவைகள் மற்றும் ஆடம்பர செலவுகளை மேற்கொள்ளும் போக்கு அதிகரித்து வருவது குறித்து ரிசர்வ் வங்கி (RBI) எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறது.

Aug 13, 2026 - 12:18
‘Live Now, Pay Later’ .. Reserve Bank-ஐ அலறவிட்ட GenZ.. என்ன ப்ரோ சொல்ற? 

2026 மார்ச் நிலவரப்படி, இந்திய குடும்பங்களின் மொத்த கடனில் வீடு, விவசாயம், தொழில் சார்ந்த கடன்களை விட நுகர்வு உள்ளிட்ட வீடு சாராத தனிநபர் கடன்களின் பங்கு 58.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2025 மார்ச்சில் 54.9 சதவீதமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் வீட்டுக் கடன்களை விட நுகர்வுக்கான கடன்கள் வேகமாக அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தங்க நகைகளுக்கு எதிரான கடன் 2022 மார்ச்சில் ரூ.74,738 கோடியாக இருந்த நிலையில், 2026 மார்ச்சில் ரூ.4.61 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், பிற தனிநபர் கடன்களின் நிலுவைத் தொகையும் ரூ.9.02 லட்சம் கோடியிலிருந்து ரூ.17.32 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் தொடர்பாக RBI தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. 2026 மார்ச் நிலவரப்படி பாதுகாப்பற்ற சில்லறைக் கடன்களின் மொத்த வாராக்கடன் விகிதம் 1.7 சதவீதமாக இருந்தது. குறிப்பாக பொருளாதார சூழல் பாதிக்கப்பட்டால், கடன் பெற்றவர்களின் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனில் அழுத்தம் ஏற்படலாம் என RBI தெரிவித்துள்ளது.

இந்த கடன் கலாசாரத்தில் இளம் தலைமுறையினரின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. TransUnion CIBIL தரவுகளின்படி, கடன் பெறத் தகுதியுள்ள மக்களில் கடன் செயல்பாட்டில் இருப்பவர்களின் விகிதம் சுமார் 10 ஆண்டுகளில் 11 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் கிட்டத்தட்ட பாதி பேர் கிரெடிட் கார்டு, தனிநபர் கடன் அல்லது நுகர்வோர் பொருள் கடன் போன்ற நுகர்வுக் கடன்களை வைத்துள்ளனர்.

குறிப்பாக Gen Z உள்ளிட்ட இளம் நுகர்வோர், குறுகிய காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய சிறிய அளவிலான கடன்களை அதிகம் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகமாக கடன் சுமை கொண்ட நுகர்வோரின் விகிதமும் 2017 நிதியாண்டில் 5 சதவீதமாக இருந்த நிலையில், 2024-ல் 18 சதவீதமாக உயர்ந்தது. பின்னர் 2026-ல் 15 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.

இதன் தாக்கம் வாழ்க்கை முறையிலும் தெரிகிறது. இசை நிகழ்ச்சிகள், சுற்றுலா, பயணம் உள்ளிட்ட அனுபவங்களுக்காக சேமிப்பை பயன்படுத்துவதற்கு பதிலாக கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இசை நிகழ்ச்சிகளை சுற்றி மட்டும் ரூ.1,600 முதல் ரூ.2,000 கோடி வரை செலவிடப்பட்டிருக்கலாம் என Bank of Baroda பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

மேலும், 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் பெறப்பட்ட தனிநபர் கடன்களில் 25 சதவீதத்துக்கும் மேற்பட்டவை பயணத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக Muthoot Finance அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனால் ‘Live Now, Pay Later’ என்ற மனநிலை இளம் தலைமுறையினரிடம் வலுப்பெற்று வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சேமிப்பை விட கடன், தேவையை விட அனுபவம் என்ற இந்த புதிய நுகர்வு கலாசாரம் தொடர்ந்து அதிகரித்தால், குறிப்பாக இளம் கடனாளிகளின் திருப்பிச் செலுத்தும் திறன் பாதிக்கப்படலாம் என்பதே RBI-யின் முக்கிய கவலையாக உள்ளது. இதனால் கடன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில், அது உண்மையான தேவைக்கான கடனா, கடனாளியின் வருமானத்துக்கு ஏற்றதா என்பதையும் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் நிதித்துறை உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow