எப்போது வேண்டுமானாலும் திமுக கூட்டணி உடையும்- எடப்பாடி பழனிச்சாமி!
உதய் மின் திட்டம் பற்றி திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் தகவல் சொல்கிறார் என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து வருகிறார் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி தொகுதியில் கொட்டும் மழையில் நனைந்தபடி மக்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதற்கு அடுத்தப்படியாக பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட திருச்செந்தூர் பிரதான சாலை மார்க்கெட் அருகே வந்த போது எடப்பாடி பழனிச்சாமிக்கு புதுமையான முறையில் ட்ரோன் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பிரச்சார பயணத்தின் போது எடப்பாடியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் உடன் இருந்தார். பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையும் என தெரிவித்தார். அதன் விவரங்கள் பின்வருமாறு-
”திமுக தலைவர் ஸ்டாலின் போகிற இடமெல்லாம், 'திமுக கூட்டணி பலமான கூட்டணி' என்கிறார். எப்போது வேண்டுமானாலும் அந்தக் கூட்டணி உடையும். கூட்டணியை நம்பியிருப்பவர்கள் அவர்கள், நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம். நீங்கள் தான் எஜமானர்கள், கூட்டணி காலத்திற்கு ஏற்ப மாறும், மக்கள் எடுக்கும் முடிவு நிலையானது. உங்கள் முடிவின்படி அதிமுக கூட்டணி வெல்லும்.
திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதங்களாகிறது. மக்கள் சந்திக்கின்ற துன்பம் ஏராளம். விவசாயிகள், ஆசிரியர்கள் என எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்கள். 525 வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு அதில் 98% நிறைவேற்றினோம் என்று பச்சைப் பொய் சொல்கிறார்கள்” என்றார் எடப்பாடி.
உதய் மின் திட்டம்:
”உதய் மின் திட்டம் பற்றி ஸ்டாலின் பொய் தகவல் சொல்கிறார். 2017ல் தான் உதய் மின் திட்டத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டோம். தமிழ்நாடு மட்டும்தான் கையெழுத்திடாமல் இருந்தது. அதிலிருக்கும் இரண்டு விதிகளை மாற்றினால் மட்டுமே கையெழுத்திடுவோம் என்று சொல்லிவிட்டோம். அதில், 3 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டண உயர்வு மற்றும் விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்துவது ஆகிய இரண்டையும் ஏற்க முடியாது என்றோம். இரண்டையும் மத்திய அரசு ஒப்புக்கொண்ட பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்.
அதனால்தான் 2017 முதல் 2021 வரை மின் கட்டணம் உயர்த்தவில்லை. திமுக ஆட்சியில் 67% உயர்த்திவிட்டு, அதிமுக ஆட்சியே காரணம் என்று திட்டமிட்டு தவறான செய்தியைப் பரப்புகிறார். சொத்துவரி விதிக்க மாட்டேன் என்று சொன்னார், ஆனால் இன்று 100 முதல் 150% வரை உயர்த்திவிட்டனர்” எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
What's Your Reaction?






