நிறுத்தப்பட்ட 33 பைசா விவசாயிகள் நகை கடன் திட்டம்: பிரதமருக்கு வலுக்கும் கோரிக்கை
மத்திய அரசின் வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் விவசாயிகளுக்கு 33 பைசா வட்டியில் மூன்று லட்சம் வரை நகை கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளன.

33 பைசா விவசாயிகள் நகை கடன் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால் நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனரான வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு-
“கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் பயிர் கடன் தொகை பயிர் சாகுபடி செலவுக்கு போதாததால் இந்த கடன் விவசாயிகளுக்கு மிகவும் உபயோகமாக இருந்து வந்தது. மேலும் ஆண்டின் இறுதியில் அந்த ஆண்டுக்குரிய வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பித்து வந்தார்கள், தற்போது வங்கிகள் அவ்வாறு புதுப்பிப்பதற்கு ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை காரணம் காட்டி அனுமதி மறுத்து விடுவதால் மீண்டும் கடனை வாங்கி முழு கடன் தொகையையும் செலுத்தி விவசாயிகள் மீண்டும் மறு கடன் பெறுவதற்கு முழுமையாக 15 நாட்கள் வங்கிகளுக்கு அலைய வேண்டிய சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சிரமத்தை உண்டாக்கிய சுற்றறிக்கை:
விவசாயிகளின் நகைகள் வங்கியில் உள்ளபோது அவற்றை புதுப்பிப்பதே சரியானது, மேலும் இந்த நடைமுறை வங்கிகளுக்கும் கடுமையான வேலைப்பளுவை ஏற்படுத்துகிறது, விவசாயிகளும் வங்கியின் முன்பு காத்து கிடக்கிறார்கள், எனவே புதுப்பிப்பது என்பது விவசாயிகள் - வங்கி என இரு தரப்புக்குமே பயனுள்ளதாக இருக்கும், ஆனால் தற்போதைய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையால் மிகப்பெரிய சிரமத்தை வங்கிகளும் விவசாயிகளும் சந்தித்து வருகிறார்கள், இது விவசாயிகளுக்கு வழங்கியுள்ள கடுமையான தண்டனையை போல் உள்ளதாக விவசாயிகள் கருதுகிறார்கள்.
33 பைசா விவசாயிகள் நகை கடன் திட்டத்தில், விவசாயிகள் 70 பைசா வட்டியை முழுமையாக வங்கியில் செலுத்தி கடனை புதுப்பித்த பின்பு, வட்டி மானியம் தனியாக வங்கியால் விவசாயிகளுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்கில் பின் ஏற்ப்பு மானியமாக வரவு வைக்கப்பட்டு விடுகிறது, தற்போது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு விடுவிக்க வேண்டிய வட்டி மானிய தொகையை விடுவிக்காததால் வங்கிகள் அந்த கடன் கொடுப்பதையே நிறுத்தி விட்டன. இதனால் பல்வேறு விவசாய பணிகள் முடங்கிக் கிடக்கிறது, விவசாயிகள் கடுமையான கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
விவசாயிகள் மீது பொருளாதார தாக்குதல்:
மத்திய பிஜேபி அரசின் இந்த நடவடிக்கையானது விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட பொருளாதாரத் துல்லிய தாக்குதலாகவே (Economical Surgical Strike) விவசாயிகள் கருதுகிறார்கள்.
பல ஆயிரம் கோடி கடனை பெற்றுவிட்டு வங்கிகளுக்கு திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் இருக்கும் விஜய் மல்லையா வகையறாக்களிடமிருந்து பணத்தை மீட்க முடியாத மத்திய பிஜேபி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 15 லட்சம் கோடி கடன் தள்ளுபடி கொடுத்த மத்திய பிஜேபி அரசு, ஏழை சிறு குறு விவசாயிகள் மீது நடத்தியுள்ள இந்த பொருளாதாரத் துல்லிய தாக்குதல் என்பது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். வாக்களித்த இந்திய விவசாயிகளுக்கு மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் கொடுத்த தண்டனையாகவே விவசாயிகள் இதை கருதி வருகிறார்கள்.
எனவே மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் விவசாயிகள் மீது உண்மையாக பற்று இருக்குமானால் அதை வெளிக்காட்ட வேண்டிய நேரமாக இதை கருதி உடனடியாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய நிதித்துறைக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்து மீண்டும் 33 பைசா விவசாய நகை கடன் திட்டத்தை தொடரவும், வருட இறுதியில் வட்டியை மட்டும் கட்டி புதுப்பித்துக் கொள்ளும் முறையை அனுமதிக்குமாறு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more:
மக்காச்சோளத்தின் மீதான 1% செஸ் வரி: 500 ரூபாய் வரை நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகள்!
தமிழகத்தில் 100 மரகதப் பூஞ்சோலைகள் திட்டம்: அரசின் பலே ஐடியா!
What's Your Reaction?






