அதிமுக கோட்டை... திமுக கணக்கு... விஜய்யின் வியூகம்! இடைத்தேர்தலில் யாருக்கு ‘செக்’?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக–திமுக தங்கள் வெற்றிக் கணக்கைப் போட, இரு கட்சிகளுக்கும் பொதுவான அரசியல் சவாலாக மாறியிருக்கும் தவெக, விஜய்யின் தலைமையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதே பரபரப்பான எதிர்பார்ப்பு.
மதுராந்தகம்... தாராபுரம்... இரண்டுமே அ.தி.மு.க. ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகள். அதனால், ‘நம்முடைய தொகுதிகளை மீண்டும் கைப்பற்றியே ஆக வேண்டும்’ என்ற முனைப்பில் இருக்கிறது அ.தி.மு.க. ஆனால், இந்த முறை களம் வேறு மாதிரி இருக்கிறது. தி.மு.க. ஒரு பக்கம்... அ.தி.மு.க. இன்னொரு பக்கம்... இவர்களுக்கு நடுவே விஜய்யின் த.வெ.க.! நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்கினால், போட்டி நான்கு முனையாகிவிடும். ஆனால், இந்தத் தேர்தலில் ஒரு வினோதமான அரசியல் கணக்கு ஓடுகிறது.
அ.தி.மு.க. வென்றால் தி.மு.க.வுக்கு பெரிய பிரச்னையில்லை. தி.மு.க. வென்றால் அ.தி.மு.க.வுக்கும் பெரிய தலைவலி இல்லை. ஆனால், தவெக மட்டும் வெற்றி பெற்றுவிடக் கூடாது. இந்த ஒரு விஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுக்கும் ஒரே எண்ணம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
மதுராந்தகம்... அதிமுகவின் முதல் கணக்கு!
மதுராந்தகத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கை கொடுக்கும் பல விஷயங்கள் இருக்கின்றன. பட்டியலின மக்களுக்கு இணையாக வன்னியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் பா.ம.க. இருப்பது இந்தத் தொகுதியில் தங்களுக்கு கூடுதல் பலமாக அமையும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்குப் போடுகிறது. இந்த மூன்றையும் வைத்துத்தான் அதிமுக தனது தேர்தல் வியூகத்தை அமைக்கிறது.
தாராபுரம்... இன்னொரு சென்டிமென்ட்!
தாராபுரம் தனித்தொகுதியிலும் அதிமுகவுக்கு நீண்டகால செல்வாக்கு இருப்பதாக அக்கட்சி கருதுகிறது. குறிப்பாக, கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தின் வாக்குகள் தேர்தல் முடிவில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடியவை. அதிமுகவுக்கு இதுவும் ஒரு ப்ளஸ். அதனால், ‘இந்த இரண்டு தொகுதிகளும் மீண்டும் நமக்குத்தான்’ என்ற நம்பிக்கையுடன் களப்பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது அக்கட்சி.
சத்தியபாமா விவகாரம்!
சமீபத்தில் நடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வாக்காளர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்ததாக அக்கட்சி தரப்பு கூறுகிறது. அந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார். இந்த விஷயத்தை தொகுதி மக்கள் ரசிக்கவில்லை என்கிறார்கள் அதிமுகவினர். அதனால், ‘இந்த முறை மக்கள் நிச்சயம் நம்மை கைவிட மாட்டார்கள்’ என்ற நம்பிக்கையில் களமிறங்குகிறது அதிமுக.
திமுகவுக்கு ஒரு டெஸ்ட்... தவெகவுக்கு ஒரு வாய்ப்பு!
திமுகவை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் முக்கியமானது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களிலேயே நடைபெறும் தேர்தல் என்பதால், ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இதில் கிடைக்கும் வெற்றி அல்லது தோல்வி... அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இதே விஷயத்தை விஜய் தரப்பு வேறு விதமாகப் பார்க்கிறது. ‘நான்கு மாத ஆட்சியின் செயல்பாடுகள், கூட்டணி பலம் இல்லாமல் தவிக்கும் தி.மு.க. ஆகியவை த.வெ.க. வேட்பாளர் வெற்றிக்கு கைகொடுக்கும்’ என்பது விஜய்யின் கணக்கு.
விஜய்யின் வியூகம்... வேற லெவல்?
த.வெ.க.வைப் பொறுத்தவரை, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் ஏற்கெனவே அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோரையே மீண்டும் களமிறக்க அக்கட்சி முடிவு செய்திருக்கிறது. அதேநேரத்தில், இதே தொகுதிகளில் ஏற்கெனவே த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சமரசப்படுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு அல்லது வாரியத் தலைவர் பதவிகள் வழங்கும் திட்டம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ‘உள்குத்து இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும்’ என்பதுதான் விஜய் தரப்பின் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
இன்னொரு அதிர்ச்சி கணக்கு!
தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கும் அ.தி.மு.க., இந்த இடைத்தேர்தலில் வெற்றியை நோக்கி ஓடுவதைவிட சட்டமன்றத்தில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில்தான் கவனம் செலுத்தும் என்று தவெக தரப்பு கணக்குப் போடுகிறது.
இரு கட்சிகளின் ‘பொது எதிரி’ விஜய்யா?
இதுதான் இந்தத் தேர்தலின் மிக முக்கியமான அரசியல் திருப்பம். விஜய்யின் அரசியல் வருகையை திமுகவும் அதிமுகவும் ஆரம்பத்தில் வெவ்வேறு விதமாக அணுகின. ஆனால், இப்போது நிலைமை மாறிக்கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதாவது, ‘விஜய் வளர்ந்தால் யாருக்கு பாதிப்பு?’ என்ற கேள்விக்கு இரு கட்சிகளும் தங்களுக்குள் கணக்குப் போடத் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதனால்தான், இந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறக்கூடாது என்பதில் திமுகவும் அதிமுகவும் ஒரே புள்ளியில் நிற்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஒருபக்கம், ‘இது எங்கள் கோட்டை!’ என்கிறது அதிமுக. மறுபக்கம், ‘ஆட்சியின் மீது இருக்கும் அதிருப்தி எங்களுக்கு சாதகம்!’ என்கிறது திமுக. நாம் தமிழரும் களத்தில் இருந்தால், வாக்குகள் இன்னும் பிரிய வாய்ப்பு. அப்படியானால், அதிமுக தனது பழைய கோட்டையைத் தக்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?