வட இந்தியாவிலும் களமிறங்கிய மாஃபியா? வைரலாகும் போலி வீடியோக்கள்.. ஆதாரத்துடன் வெளியிட்ட இந்தியா டுடே..!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் எங்கு குற்றம் நடந்தாலும் அவரே தக்க தண்டனை வழங்குவார் என்று வட இந்தியாவில் தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோக்களின் உண்மைத்தன்மை குறித்து இந்தியா டுடே ஆராய்ந்துள்ளது. 

Jul 17, 2026 - 13:00
வட இந்தியாவிலும் களமிறங்கிய மாஃபியா? வைரலாகும் போலி வீடியோக்கள்.. ஆதாரத்துடன் வெளியிட்ட இந்தியா டுடே..!

முதலமைச்சராக விஜய் ஆவதற்கு முன்பு, பிரபல இன்ஃப்ளூயன்ஸர் ஐ ஸ்பீடிடம், சிஎம் ஆஃப் இந்தியா விஜய் என்று கூறியது வைரலாகியது. முதலமைச்சர் என்பவர் மாநிலத்திற்கானவர் என்ற புரிதல் கூட இல்லாமல் தவெகவினர் செய்த அந்த செயல், தற்போது உண்மையாகிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சொல்லப்போனால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜயை, இந்தியாவின் முதலமைச்சராக மாற்ற சமூக வலைத்தளத்தில் பெரிய மாஃபியாவே வேலைப் பார்க்கிறது என்றே சொல்ல வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

அதாவது, தற்போது வட இந்தியாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய், தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தூக்கிலிடப்படுவார்கள் அல்லது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்றும், தனியார் மருத்துவமனையில் நோயாளி உயிரிழந்தால் மருத்துவக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட்டதாக சமூக வலைதளங்களில் இந்தி மொழியில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

இந்த வீடியோக்களில் ஒரே மாதிரியான வசனங்கள், ஒரே மாதிரியான மருத்துவமனை காட்சிகள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட தம்ப்நெயில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. "Thalapathy Vijay ka bada naya faisla" போன்ற தலைப்புகளுடன் பல சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் இந்த தகவல்களை பரப்பி வருகின்றனர். 

ஆனால், இந்தக் கூற்றுகள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என இந்தியா டுடே ஃபாக்ட் செக் உறுதி செய்துள்ளது. மேலும், முதலமைச்சர் விஜய் அலுவலகத்தின் மூத்த அதிகாரியும் இதுபோன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதாகவும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல இன்ஃப்ளூயன்சர்கள் இந்த போலி தகவல்களை பகிர்ந்ததால், ஆயிரக்கணக்கானோர் அதை உண்மை என நம்பி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இந்த தவறான தகவல்களை ஏன் பரப்பினீர்கள் என்று கேட்கப்பட்டபோதும், சம்பந்தப்பட்ட இன்ஃப்ளூயன்சர்கள் யாரும் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில், உண்மையற்ற தகவல்கள் எவ்வாறு திட்டமிட்டு அல்லது ஆதாரமின்றி பரப்பப்படுகின்றன என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது என்று கூறப்படும் நிலையில், இதற்கு பின்னால் ஒரு மாஃபியாவே இருப்பதாகவும், மோடி Vs விஜய் என்ற நிலையை இப்போதே கொண்டு வர வேண்டும் என்று இவற்றையெல்லாம் செய்வதாகவும் உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow