கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்: பாஜக வரவேற்கிறது- எச்.ராஜா 

கர்நாடகா பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவை நான் வரவேற்கிறேன்

Nov 20, 2024 - 17:02
 கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்: பாஜக வரவேற்கிறது- எச்.ராஜா 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக பாஜக வரவேற்கிறது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டமானது தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் உயர்மட்ட குழு கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், கனகசபாபதி நாராயணன் திருப்பதி, வி.பி. துரைசாமி, கரு.நாகராஜன்,  வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

வரும் 28ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் திரும்பும் நிலையில், அவரை வரவேற்பது தொடர்பாகவும், கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டில் வழிகாட்டு குழு செயல்பட்டு வந்த நிலையில் குழுவின் செயல்பாடுகள் குறித்தும்  பாஜக உட்கட்சி தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்க உள்ளனர். தமிழக பாஜகவில் தற்போது வரை எவ்வளவு உறுப்பினர் சேர்க்கை நிறைவு பெற்றுள்ளது.  எத்தனை சதவீதம் கூடுதலாக உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். மேலும் கிளைக் கழகத்தில் பாஜக வலுப்பெற்றுள்ளதா என்பது குறித்து உயர் மட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா, “ 68 பேர் உயிரிழந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் நீதிமன்றத்தின் மூலமாக கள்ளச்சாராயம் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. டாஸ்மாக் சாராயம் சந்து கடை சாராயம் என அன்பு நண்பர் துரைமுருகன் இதை ஒத்துக்கொண்டுள்ளார்.  டாஸ்மாக் சரக்கில் போதை ஏறவில்லை என்பதற்காக சந்து கடை சரக்கை தேடி தமிழ் குடிமக்கள் போகிறார்கள் என கூறினார். இந்த அரசாங்கத்தின் முழு தோல்வி தான் கள்ளக்குறிச்சி சம்பவம். 

எல்.ஐ.சி விஷயத்தில் எல்லா மொழிகளிலும் விளம்பரம் கொடுத்திருந்தார்கள்.  சில காரணங்கள் மூலமாக தமிழ் வரவில்லை. ஆனால் அதை முதலமைச்சர் பெரிய பிரச்சனை ஆக எடுத்துப் பேசி இருக்கிறார். நான் கேள்வி கேட்கிறேன். தமிழ்நாட்டில் திமுக தமிழுக்காக பேசுவதற்கு எந்த அருகதையாவது இருக்கிறதா?

ஏனென்றால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மகன் தமிழ் படிக்கவில்லை என செய்திகள் வந்திருக்கிறது. தன் வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டீர்கள். ஆனால் தமிழக மக்களுக்கு இரு மொழி கொள்கை பேசுவீர்களா? மு.க.ஸ்டாலின் குழந்தைகள், கனிமொழி குழந்தைகள், இரு மொழி கொள்கை படிக்கிறீர்களா? அதை பின்பற்றுகிறீர்களா? வெட்கமே இல்லாமல் சிபிஎஸ்இ பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள்.  குற்றவாளிகளின் கட்சி திமுக எனவும்சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் தமிழ் வேஷம் போடுகிற திமுகவினரின் குழந்தைகளை மும்மொழி படிக்கும், ஏழை தமிழ் மக்கள் விவசாய குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்கக்கூடாதா? ஏழை தொழிலாளர்களின் மகன் படிக்கக்கூடாதா? அன்பில் மகேஷ் பெய்யா மொழி மகன் பிரெஞ்சு படிக்க வேண்டும் ஏன் தமிழ் படிக்கவில்லை.  திமுகவில் உள்ளவர்கள் சமச்சீர் கல்வி முறையில் சேர்க்க மாட்டீர்களா? மோசமான நடவடிக்கை மக்கள் விரோத செயல்கள். காங்கிரஸ் உடன் ஆட்சியில் இருந்தபோது பத்து ஆண்டுகளாக மூன்றாவது மொழியாக ஹிந்தி இருந்தது. முதன்முதலாக பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் தாய்மொழி, ஆங்கிலம் மற்ற பிற மொழிகள் என கொண்டு வந்தது பிரதமர் மோடி.

தேசிய கல்விக் கொள்கை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. அதில் மூன்றாவது மொழி ஹிந்தி என இருந்ததை ஏதாவது ஒரு இந்திய மொழியை தேர்ந்தெடுக்கலாம் எனவும் எல்லா மொழிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து பிரதமர் மோடி தான். விருப்பப்பட்ட மொழியை கற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டது. ஆனால் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அரசை குறை சொல்வதை மக்கள் மறுத்தலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உங்கள் வேஷம் எடுபடாது. 1967ல் உள்ள  திமுக வேறு, அப்போது நீங்கள் குற்றவாளிகளாக இல்லை, இன்றைக்கு எல்லா திமுகவினரும் முதலமைச்சர் உட்பட குடும்பத்தில் இருந்து எல்லோரும் குற்றவாளிகள் தான். தமிழ் விஷயத்தில் அறிக்கை விடுவதை முதலில் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.

திமுகவினரின் வாரிசுகள் சென்னையில் உள்ள சமச்சீர் கல்வியில் படிக்கிறார்களா அல்லது சிபிஎஸ்இயில் படிக்கிறார்களா என தகவல் எடுக்கச் சொல்லி இருக்கிறேன்.  40 திமுக தலைவர்கள் நடத்தக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிக்கூடம் பற்றி பட்டியல் வெளியிட்டு இருக்கிறேன். இரட்டை வேடம் போடுகிறார்கள். தன் வீட்டுக்கு ஹிந்தி சமஸ்கிருதம் வேண்டும். ஆனால் தமிழ் மக்கள் ஹிந்தி படிக்கக்கூடாது.அமைச்சர் மகனே அதை கூறியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாணவியை பாலியல் தொல்லை செய்தார்.கனிமொழி அதைப் பற்றி பேசவில்லை.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாயை மூடிக்கொண்டு உள்ளார். மகாவிஷ்ணு ஆன்மீகம் பற்றி பேசிவிட்டார் என எவ்வளவு நாடகம் போட்டார் வெட்கமே இல்லாமல். ஆனால் இந்த விஷயத்தில் தூத்துக்குடி உங்கள் பேட்டையில் வராதா எனவும் அது கனிமொழி பேட்டையா எனவும் மகேஷ் பேட்டையில் வராதோ எனவும் கேட்டார்.

தஞ்சையில் பள்ளி ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தான கேள்விக்கு, தமிழகத்தில் தினம்தோறும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. போதை தான் இதற்குக்காரணம். பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் ஆசிரியர்களை கொலை செய்வது, தாக்குவது பள்ளிக்கூட குழந்தையின் பையில் ஆயுதம் இருக்கிறது. இது தூக்கி எறிய வேண்டிய மாநில அரசு. கூட்டணியை பற்றி கேள்விகளை கேட்க வேண்டாம் நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். கூட்டணியை பற்றி கேட்க வேண்டியது அவர்களை தான். பாஜகவை பொருத்தவரை கூட்டணியை பற்றிய அறிவிப்பை செய்ய மாட்டோம். கர்நாடகா பாடகர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவை நான் வரவேற்கிறேன்” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow