காமதேனு காசு பூஜை செய்தால் என்ன பலன்? எப்படி வழிபட வேண்டும்?
உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உ ஒரு பசுமாட்டினை ஒரே ஒரு முறை வலம் வந்து கும்பிட்டால், முப்பத்து முக்கோடி தேவர்கள், நவகிரஹங்கள்,அஷ்ட வசுக்கள்,நாகர்கள், பஞ்சபூதங்கள் உள்ளிட்ட சகலரையும் ஆராதித்த புண்ணியம் கிடைக்கும்.
அப்படியானால் இந்த உலகத்தில் உள்ள பசுக்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக நீங்கள் வலம் வந்தால், வணங்கினால் எவ்வளவு நற்பலன்கள் கிடைக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அத்தனை புண்ணியமும் உங்களுக்குக் கிடைக்கவேண்டும். நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கவேண்டும். உங்கள் வீட்டில் எல்லாம் செல்வங்களும் நிலைக்கவேண்டும் என்பதற்காகவே இந்த இதழுடன், விசேஷமாக பூஜிக்கப்பட்ட வேறு எங்கும் கிடைக்காத காமதேனு காசு இணைப்பாகத் தரப்பட்டிருக்கிறது இந்தக் காசு என்று உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்படுகிறதோ, அன்று முதல் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உன்னதமான நாளாக இருக்கும்.
ஆமாம், தினம் தினம் திருநாளாக இருக்க வேண்டும் என்பதால்தான், திருப்பதியில்கூட அனுதினமும் திருமலையான் திருவாசல் திறந்ததும் முதலில் பசுவையே பார்க்கிறார். சகல தெய்வங்களும் காமதேனுவின் உடலில் இடம்பிடித்தது எப்படி? பூவுலகில் பசு இனம் வந்தது எவ்வாறு என்ற புராணக் கதைகளைப் பார்த்துவிட்டு, காமதேனு காசு பூஜையை எப்படிச் செய்வது என்று தெரிந்துகொள்வோம்.
அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது. அதில் இருந்து வெளிப்பட்ட அபூர்வமான பொருள்களுள் காமதேனுவும் ஒன்று. வேண்டுவோர் வேண்டியதை உடனடியாக வழங்கும் ஆற்றலும் கோடி சூரிய பிரகாசமும் பொருந்திய காமதேனு தோன்றியதும் எல்லோருமே அதனை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டனர்.
ஆனால், காமதேனு, தான் கயிலை சென்று தவம் செய்யப் போவதாகச் சொல்லிப் புறப்பட்டாள்.
அங்கே நீண்டகாலம் தவம் செய்த அவளது பொறுமை, அமைதி, பக்தி என அனைத்தையும் கண்ட மும்மூர்த்தியர் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், மேலும் யாவரும் அவள் முன் ஒரே சமயத்தில் தோன்றினர். பிரம்மா, காமதேனுவுக்கு என்றே ஓர் உலகினை உருவாக்கி, கோ லோகம் எனப் பெயரிட்டு அதனை அவளுக்கு அளித்தார்.
மகிழ்ந்த காமதேனு. சகல தேவர்களையும் வணங்கி, தான் எல்லோருக்கும் பயன் தரும் வகையில் செயல்பட விரும்புவதாகவும், குறிப்பாக பூவுலக மாந்தர்களுக்கு உதவிட விரும்புவதாகவும் சொன்னாள். அவளது வேண்டுதலைக் கேட்டு மகிழ்ந்த அனைவரும். அப்படியே ஆகட்டும் என்றார்கள். அதோடு, அவளது உடலில் தாங்களும் குடியேறி, அவளது நற்செயல்களுக்குத் துணையாக இருப்பதாகவும் கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து தேவர்கள் யாவருக்கும் தன் உடலில் இடமளித்த காமதேனு, தன் அம்சங் களான பசுக்களை பூவுலகில் பிறக்கச் செய்தாள். காமதேனுவுக்கு, நந்தினி, பட்டி என இரு மகள்கள் உண்டு. அவர்களும் தேவலோகத் திலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தேவர்களின் அம்சமும் இணைந்த காமதேனுவிடம் இருந்து தோன்றியதாலேயே பூவுலகில் உள்ள பசுக்களின் தேசத்திலும் சகல தேவர்களும் நிறைந்திருப்பதான ஐதிகம் வந்தது.
மகாபாரதத்தின் அனுசான பர்வம் கோலோக மகாத்மியம் வாயுபுராணம் பவிஷ்ய புராணம் என்று நூல்கள் பலவும் காமதேனுவின் பெருமையைப் பேசுகின்றன.
காமதேனுவே உலகத்தில் தன் இனமான பசுக்கள் மூலம் தர்மத்தை நிலைநிறுத்தி, பிரபஞ்சத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்கின்றன வேத புராணங்கள். உனக்கு என்னவேண்டும் என்று நீ முழு மனதாக நினைக்கிறாயோ அதனை இந்தப் பிரபஞ்சம் உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கும் என்று சொல்வார்கள் அல்லவா? தர்மத்தின் உதவியோடு இந்தப் பிரபஞ் சத்தைத் தாங்கி நிற்கும் காமதேனுவே அதனைச் செயல்படுத்துவதாகச் சொல்கிறது பவிஷ்ய புராணம்
தேனு என்றால் பசு என்று அர்த்தம்.
காமம் என்றால் விருப்பம் என்பது பொருள். விருப்பத்தினை ஈடேறச் செய்யும் பசு என்பதால்தான், காமதேனுவுக்கு அந்தப் பெயர். அதே பெயரினைத் தான் தாங்கி, தேனுகாம்பாளாக அம்பிகை வீற்றிருக்கும். மாடம்பாக்கம் தலத்தில்தான், இந்த இதழுடன் இணைப்பாகத் தரப்பட்டிருக்கும் காமதேனு காசு குமுதம் பக்தியின் வாசகர்களான உங்கள் பெயரால் பூஜிக்கப்பட்டது.
முதலில் மூலவர் தேனுபுரீஸ்வரர் சன்னதியிலும் பிறகு தேனுகாம்பாள் சன்னதியிலும் வைத்து பூஜிக்கப்பட்ட காசு, பிறகு உற்சவர் மண்டபத்தில் விசேஷ அலங்காரத்துடன் திருக்காட்சியளித்த அம்மன் திருவடிகளில் வைக்கப்பட்டு, நூற்றியெட்டு போற்றிகள், யஜுர், சாமவேத மந்திரங்கள், அபிராமி அந்தாதி துதிகள் என யாவும் சொல்லப்பட்டு உங்கள் பெயராலேயே விசேஷ ஆராதனைகள் செய்யப்பட்டன. (குமுதம் பக்தி யூ டியூபில் பார்க்கலாம்)
சரி, காமதேனு பூஜை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
இந்த இதழுடன் இணைப்பாகத் தரப்பட்டிருக்கும் காமதேனு காசினை, வாங்கிச் செல்லும் தினத்தில் மாலையில் நல்ல நேரத்தில் அதனை எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்து சில விநாடிகள் உற்றுப் பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் பார்க்கச் சொல்லுங்கள். (ஒவ்வொரு முறையும் காக அல்லது யந்திரத்தை இப்படிப் பார்க்கச் சொல்லக் காரணம், நயன திருஷ்டி என்பதான உங்கள் பார்வை ஆற்றல் அவற்றில் பதியவும், அவற்றில் உள்ள தெய்வீக ஆற்றல் உங்களுக்குள் பரவுவதற்காகவும்தான்) பிறகு காமதேனு காசினை அப்படியே சுவரில் வைத்து பூஜை அறையில் வைத்துவிடுங்கள். செவ்வாய், வெள்ளிக் கிழமை அல்லது பௌர்ணமி யன்று அதிகாலையில் எழுந்து (கோபூஜையை அதிகாலையில் செய்வதுதான் விசேஷம்) குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வையுங்கள்.
பிறகு பிள்ளையாரை வேண்டிக்கொண்டு இஷ்ட தெய்வம், குலதெய்வத்தை மனதுக்குள்ளாக பிரார்த்தியுங்கள். பிறகு காமதேனு காசினை எடுத்து பூஜை அறையில் உள்ள விளக்கிற்குப் பக்கத்தில் வையுங்கள். காமதேனுவின் தேகத்தில் எல்லா தெய்வங்களும் வசிப்பதால், ஒவ்வொரு தெய்வத்தையும் தனித்தனியாக விளக்கேற்றிக் கும்பிட முடியாது என்பதால் இப்படி வைக்கவேண்டும். ஓரிரு பூக்களையும், கொஞ்சம் மஞ்சள், குங்குமத் தினையும் காமதேனு காசின்மீது போடுங்கள்.
பொதுவான அம்மன் பூஜைகளைப் போன்றதுதான் காமதேனு பூஜையும். அதேசமயம் காமதேனுவின் அம்சமாக பசுவின் சிலையை வைப்பதானால், கூடவே கன்றின் சிலையும் இருக்கவேண்டும். இந்தக் காசில் காமதேனுவே இருப்பதால் தனியே கன்றின் வடிவம் இருக்கவேண்டியதில்லை. ஏனென்றால் காமதேனுவின் அம்சத்திலேயே அதன் கன்றுகளான நந்தினி, பட்டியும் இருப்பதாக ஐதிகம்.
விளக்கினை ஏற்றி வைத்து, அதன் அருகே காமதேனு காசினை வைத்த பிறகு குடும்பத்தில் எல்லோரும் மனதை ஒருநிலைப்படுத்தி, ஓம் சுபகாமாயை வித்மஹே, காமதாத்ரை ச தீமஹி. தந்நோ தேனு:பிரசோதயாத் என்ற காயத்ரி மந்திரத்தினை மூன்றுமுறை சொல்லுங்கள்.
பிறகு, "ஸர்வ தேவமயம் தேவி ஸர்வ தேவவகை: வ்ருதம் காமதேனு மஹாபாகே நமஸ்தே ஸர்வ காமதே" என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தையோ அல்லது. சகல தேவர்களின் அம்சங்களும் நிறைந்தவளே, சர்வ தேவர்களுக்கும் விருப்பமானவளே, விரும்பிய அனைத்தையும் தரும் வல்லமை படைத்திட்ட தேவியே உன்னை முழுமையான மனதுடன் துதிக்கிறேன். எங்களின் நியாயமான தேவைகள் அனைத்தையும் தருவாயாக! என்று அர்த்தத்தையோ ஒவ்வொருவரும் சொல்லி, அவரவர் தேவையை மனதார நினைத்துக்கொள்ளுங்கள். எல்லோருமாகச் சேர்ந்து குடும்ப நலனுக்காக வேண்டிக்கொள்வது மிகச் சிறப்பு: அதன் தமிழ் பிறகு எல்லா பூஜைகளையும்போல தூப தீப ஆராதனை செய்யுங்கள்.
இந்த பூஜையில் மிக முக்கியமான விதி, பால் சேர்ந்த எதையும் நிவேதனம் செய்யக் கூடாது. குறிப்பாக பசும்பால் தவிர்ப்பது நல்லது. முடிந்தால், அன்றைய தினம் பால் சேர்த்த காபி, டீ: தயிர், நெய் தவிர்ப்பது நல்லது. காரணம். கன்றுக்குப் பால் ஊட்டிய பிறகுதான் பசுவிடம் இருந்து பால் கறந்து நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது சாஸ்திர விதி. நாம் வாங்கும் பால் அத்தகையதா என்பதைத் தெரிந்துகொள்வது இயலாது அல்லவா? அதனால்தான்.
கோதுமை அப்பம், சர்க்கரைப் பொங்கள் வெல்லம் போட்ட பருப்புப் பாயசம் இவற்றில் எதையாவது நிவேதனம் செய்யலாம் நிவேதனம் செய்த பிறகு, காமதேனு காசினை குடும்பத்தில் மூத்தவர் எடுத்து அதனை சுவாமி முன்பாக ஒரு பலகையை வைத்து அதில் வைக்க வேண்டும். அதாவது பசுவை வலம் வருவதுபோல், இந்தக் காசினை வலம் வரவேண்டும் அதற்கு ஏற்ற வகையில் வைத்துக்கொள்ளுங்கள். எல்லோருமாகச் சேர்ந்து மூன்றுமுறை வலம் வந்து நமஸ்கரியுங்கள். பிறகு காசினை எடுத்து, விளக்கின் அருகே வைத்துவிடுங்கள்.
இந்தப் பிரசாதத்தில் கொஞ்சத்தையாவது பசுவுக்குத் தரவேண்டும். அல்லது கோசாலைப் பசுக்களுக்கு தீவனம் எதையாவது வாங்கியும் தரலாம். ஒரே ஒரு பசுவுக்காவது இப்படித் தருவது அவசியம். (அகத்திக்கீரை கூடாது) அவ்வளவுதான், பூஜை நிறைந்தது. காமதேனு காசினை அன்று மாலை ஆறு மணிக்கு மேல் எடுத்து, பத்திரமாக கவரில் போட்டு, பூஜை அறையில் வைத்துவிடுங்கள். மாதம் ஒருமுறை இந்த பூஜையை உங்கள் வசதியான தினத்தில் செய்யுங்கள்.
உங்களின் எல்லா விருப்பங்களும் காமதேனுவின் அருளால் நிச்சயம் ஈடேறும் சுபங்களும் சுபிட்சங்களும் சேரும். உங்கள் இல்லத்தில் சந்தோஷ வெளிச்சம் பரவும். நிறையும். நிலைக்கும்
What's Your Reaction?





