“நான் நாய் தான்… நீங்க நரி!” – நசிருதின்ஷாவுக்கு கங்கனா பதிலடி
பாலிவுட் நடிகர்கள் தொடர்பான கருத்து மோதல் தற்போது நடிகை கங்கனா ரனாவத் மற்றும் மூத்த நடிகர் நசிருதின்ஷா இடையேயான வார்த்தைப் போராக மாறியுள்ளது.
டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து பாலிவுட் பிரபலங்கள் மௌனம் காப்பதாக நசிருதின்ஷா முன்பு கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், சில பிரபலங்களை வாயில் எலும்பை வைத்திருக்கும் நாயுடன் ஒப்பிட்டு அவர் தெரிவித்திருந்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நசிருதின்ஷாவின் கருத்தை பியூஷ் மிஸ்ரா விமர்சித்திருந்தார். குறிப்பாக, ஜார்க்கண்டில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் மற்றும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் முறைகேடு, வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அவர் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
பியூஷ் மிஸ்ராவின் கருத்துகள் தொடர்பான செய்தியை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த கங்கனா, நசிருதின்ஷாவை நேரடியாக விமர்சித்தார். “உண்மையில் எல்லோரும் யாரோ ஒருவரின் நாய்தான். ஆனால், நான் எந்த நாட்டின் உணவை சாப்பிடுகிறேனோ, அந்த நாட்டை பாதுகாப்பதிலும் அதற்காக போராடுவதிலும் பெருமை கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “இன்றைய காலகட்டத்தில் மனிதர்களை நாய் என்று அழைப்பதே ஒரு பாராட்டு. ஏனெனில் விசுவாசமும் அன்பும் அரிதாகிவிட்டன. நசிருதின்ஷா போன்ற நரியாக இருப்பதைவிட நாயாக இருப்பதையே விரும்புகிறேன்” என கடுமையாக பதிவிட்டார்.
இதற்கிடையே, ஆகஸ்ட் 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக கங்கனா போராட்டம் நடத்தினார். “Rahul Gandhi jawab do” என்ற பதாகையை ஏந்திய அவர், ஜார்க்கண்டில் ஆட்சேர்ப்புத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் போலீஸ் தடியடி குறித்து ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜார்க்கண்டில் அரசு வேலைக்கான தேர்வுகளில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த விவகாரமும் அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே நசிருதின்ஷா மீதான கங்கனாவின் கடுமையான விமர்சனம் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் தொடங்கிய கருத்து மோதல் தற்போது அரசியல் களத்திலும் எதிரொலித்து வருவதால், இருதரப்பினரின் அடுத்தடுத்த கருத்துகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
What's Your Reaction?