கணவனைவிட அதிக வருமானம் ஈட்டும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாதா? – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கணவனை விட உயர்ந்த வருமானம் பெற்று, தனித்து வாழ்வதற்குத் தேவையான பொருளாதார வசதிகள் கொண்டுள்ள மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி கணவனை நிர்பந்திக்க முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. 

Jun 30, 2026 - 20:00
Jun 30, 2026 - 18:05
கணவனைவிட அதிக வருமானம் ஈட்டும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாதா? – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, முரண்பாடு காரணமாக சில மாதங்களிலேயே தனித்தனியாக பிரிந்து வாழத் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பிரிந்து வாழ்வதற்கு பதில், ஒரேடியாக விவாகரத்து பெற்றுவிடலாமே என்று எண்ணிய மனைவி, விவாகரத்துக்கு அப்ளை செய்துள்ளார். விவாகரத்து பொஎறுவதைவிட ஜீவனாம்சம் பெறுவதையே குறிக்கோளாக வைத்துள்ளார் மனைவி. 

இந்த நிலையில், வழக்குப் பதிவுகளின்படி, கணவர் மாதம் ரூ.60,646 வருமானம் ஈட்டி வந்த நிலையில், மனைவியின் மாதாந்திர வருமானம் சுமார் ரூ.1 லட்சமாக இருந்துள்ளது. 

அப்படி, தன் கணவனை விட தன்னுடைய வருமானம் அதிகமாக இருந்தபோதிலும், தனக்கு பராமரிப்புத் தொகை அதாவது ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனைவி தொடர்ந்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம், மனைவிக்கு மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்குமாறு கணவருக்கு உத்தரவிட்டிருந்தது. தன்னால் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என்றும், தன்னுடைய சம்பளம் தன் மனைவியைவிட குறைவானதே என்றும், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கணவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சுமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜீவனாம்சம் என்பது வாழ்வாதார வசதியின்றி தவிக்கும் இணையருக்கு பாதுகாப்பளிக்கும் ஒரு சட்ட ஏற்பாடே தவிர, பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும் நபருக்கு கூடுதல் வருவாய் ஏற்படுத்தும் கருவி அல்ல என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மேலும், திருமண உறவு முறிந்தாலும், முன்னர் அனுபவித்த வாழ்க்கைத் தரத்தைத் தொடர இயலாத அளவுக்கு வருமானக் குறைபாடு இருப்பது நிரூபிக்கப்பட்டால்தான் ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இவ்வழக்கில், மனைவி நிலையான வருமானத்துடன் தன்னிறைவு பெற்றவராக இருப்பதும், கணவரைவிட அதிக ஊதியம் பெறுவதும், குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகள் ஏதுமின்றி இருப்பதும் கருத்தில் கொள்ளப்பட்டது.
இதனால், குறைந்த வருமானம் பெறும் கணவரை பராமரிப்புத் தொகை வழங்க கட்டாயப்படுத்துவது நியாயமானதாக இருக்காது எனக் கூறிய உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த மாதம் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கும் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow