ரவிக்குமார் Vs வன்னி அரசு..? விசிகவிற்குள் மோதலை தூண்டிய தவெக..! என்ன செய்யப்போகிறார் திருமா?
அமைச்சரவை பெயர் மாற்றத்தை வைத்து, விசிகவிற்குள் கருத்து மோதல் வெடித்துள்ள நிலையில், எம்.பி. ரவிக்குமாரா? அமைச்சர் வன்னி அரசா? என்று யாரை சமாதானப்படுத்துவது என்ற குழப்பத்தில் திருமா இருப்பதாக அம்பேத்கர் திடல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயரை "சமூக நீதித்துறை" என தமிழக அரசு மாற்றியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெயர் மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் வலியுறுத்திய நிலையில், அதே கட்சியைச் சேர்ந்த அமைச்சரும் சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு, அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
1922ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு "ஆதி திராவிடர்" என்ற அடையாளம் கிடைத்தது. அந்த வரலாற்று அடையாளம் பெயர் மாற்றத்தால் மங்கிவிடும் என்றும், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியின மக்களுக்கான தனித்துவமான திட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும் ரவிக்குமார் எம்.பி கவலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, "சமூக நீதித்துறை என்பது சமூக நீதியை நிலைநாட்டும் துறை. இதன் கீழ்தான் ஆதி திராவிடர் நலத்துறையும், பழங்குடியினர் நலத்துறையும் தொடர்ந்து செயல்படும். பெயர் மாற்றத்தால் எந்த சமூகத்தின் உரிமையோ, அதிகாரமோ, நலத்திட்டங்களோ குறையாது" என்று விளக்கம் அளித்தார்.
மேலும், இது முதலமைச்சர் விஜயின் தொலைநோக்கு பார்வையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும், இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தலைவர் திருமாவளவன் அறிவிப்பார் என்றும் அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். அரசின் பெயர் மாற்றத்தை பல தரப்பினர் வரவேற்ற நிலையில், விசிகவிலிருந்தே எதிர்ப்பு எழுந்ததும், அதற்கு மாறாக அக்கட்சியின் அமைச்சரே ஆதரவு தெரிவித்திருப்பதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த நிலையில், இருவருக்குமிடையேயேன மோதலை எப்படி தடுப்பது? கொள்கை ரீதியாக அமைச்சரவை பெயர் மாற்றம் சரியா? ஒருவேளை சரி என்ற பட்சத்தில் வன்னி அரசு சொல்வதை ஏற்றுக் கொள்வாரா? தவறென்னும் பட்சத்தில் ரவிக்குமாரின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக பேசுவாரா என்ற பல்வேறு குழப்பங்கள் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளதாக்க் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் திருமா விளக்கம் கொடுத்தால் மட்டுமே முடியும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
எனவே, விசிக தலைவர் திருமாவளவன் தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டாக பொதுச்செயலாளரான எம்.பி. ரவிக்குமார் சொல்வதை ஏற்றுக் கொள்வாரா? அல்லது அமைச்சரான வன்னி அரசு சொல்வதை ஆதரிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
What's Your Reaction?