மதுரை மேயர் பதவி யாருக்கு வாய்ப்பு? சூடுபிடிக்கும் அரசியல் கணக்குகள்!
மதுரை மாநகராட்சியில் மேயர் பதவி 9 மாதங்களாக காலியாக உள்ள நிலையில், புதிய மேயர் தேர்வு தொடர்பாக தி.மு.க. மற்றும் த.வெ.க. இடையே அரசியல் வியூகங்கள் தீவிரமடைந்துள்ளன.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு புகாரில் தி.மு.க. மேயர் பதவி விலகி ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படாததால் வரி வசூல் உள்ளிட்ட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முந்தைய தி.மு.க. ஆட்சியிலேயே புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தும், அதை கோட்டைவிட்ட உடன்பிறப்புகள், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரையே மீண்டும் மேயர் பதவியில் அமர வைக்க வியூகம் வகுத்துள்ள நிலையில், அதை தவிடு பொடியாக்க த.வெ.க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்தான் தூங்கா நகரில் ஹாட் டாக்!
மதுரை மாநகராட்சியில் தி.மு.க. 67, காங்கிரஸ் 5, சி.பி.எம். 4, வி.சி.க. 1, ம.தி.மு.க. 3, அ.தி.மு.க. 15, பா.ஜ.க. 1, சுயேட்சைகள் 4 பேர் என கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த சூழலில் கடந்தாண்டு சொத்து வரி முறைகேட்டில் மண்டலத் தலைவர்களான சரவணபுவனேஸ்வரி, வாசுகி பாண்டிஸ்வரி, சுவிதா, முகேஷ் சர்மா ஆகியோர் சிக்கினர். இவர்களைத் தொடர்ந்து மேயர் இந்திராணி உள்ளிட்டவர்களின் பதவியை அப்போதை முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். அவர்களும் ராஜினாமா செய்து பல மாதங்கள் ஆகிவிட்டன.
ஆட்சியில் இருக்கும்போதே தங்கள் கவுன்சிலர்களில் இருந்து ஊழலற்ற ஒருவரை மேயராக்க முடியாமல் திணறியது தி.மு.க. அதிக கவுன்சிலர்களை வைத்திருக்கும் தி.மு.க. தங்கள் தரப்பிலிருந்து மேயரை தேர்வு செய்யாமல், இரண்டு கவுன்சிலர்களை வைத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொறுப்பு மேயராகும் வாய்ப்பை வழங்கியது. தற்போது ஆட்சி மாறி, தவெ.க. அரசு அமைந்திருக்கும் சூழலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய கம்யூனிஸ்ட்டுகள், த.வெ.க. அணியில் ஐக்கியமாகிவிட்டால் அடுத்துவரும் மாமன்ற கூட்டத்திலேயே, தி.மு.க. கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து பொறுப்பு மேயர் நாகராஜனை பதவி இறக்கம் செய்ய தீர்மானித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து தி.மு.க. கவுன்சிலர்களிடம் பேசினோம். "தமிழகத்தில் உள்ள பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், ஒன்றியங்கள், பேரூராட்சிகள் இவற்றில் எல்லாம் தி.மு.க. தயவால்தான் கம்யூனிஸ்ட்கள் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். கூட்டணி முறிந்தும், அந்த பதவிகளை விட்டு வெளியேறாமல் அங்கேயே உட்கார்ந்துகொண்டு தி.மு.க.வுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கொடிகட்டி பறந்த அமைச்சர்கள் மூர்த்தி, பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தங்களது சொத்துகளைப் பாதுகாக்க வெளிநாடுகளுக்கு பறந்துகொண்டிருக்கிறார்கள். மாநகராட்சியைக் கைப்பற்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் சிறிதளவும் இல்லை.
2027 பிப்ரவரி வரைக்கும் பதவிக்காலம் இருப்பதால் அதுவரைக்கும் மாநகராட்சி நிர்வாகம் செய்யவும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை சொல்லவும் மேயர் இருக்க வேண்டும். ஏற்கெனவே, தி.மு.க. கவுன்சிலர்கள் சொல்லும் எந்த வேலைகளையும் அதிகாரிகள் செய்வதில்லை. அதற்கு மாறாக தவெக கட்சி நிர்வாகிகள் சொல்லும் வேலைகளுக்கு, முக்கியத்துவம் கொடுத்து அந்த வேலைகளை அதிகாரிகள் செய்து கொடுக்கிறார்கள். நாங்கள் மக்கள் பிரதிநிதி. மக்கள் தான் எங்களை வாக்களித்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், இங்கு எங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை.
தி.மு.க. ஆட்சியின்போது முறைகேடுகள் புகாரில் மேயர் இந்திராணி சிக்கினார். மேயர் பதவியை துஷ்பிரயோகம் செய்தார் என்பதற்காக மேயரின் கணவர் என்றுகூட பார்க்காமல் அவரை கைது செய்து சிறைக்கு தள்ளியவர்தான் எங்கள் தலைவர் ஸ்டாலின் மாநகராட்சி நிர்வாகத்தில் ஊழலை அனுமதிக்க முடியாது என்பதற்காகத்தான் காலியாக உள்ள மண்டலத் தலைவர்கள், மேயர் ஆகிய பதவிகளில் தி.மு.க. கவுன்சிலர்களை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது தி.மு.க தலைமை. சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு கவுன்சிலர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து மேயராக்கலாம் என்று திட்டம் வைத்திருந்தது தலைமை, அதற்குள் ஆட்சி மாறிவிட்டது.
மதுரையில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். மற்றும் மா.செக்கள் மீது, மக்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் கோபத்தின் விளைவு தான், மதுரையின் பத்து தொகுதிகளில் எட்டு இடங்களில் தி.மு.க. மண்ணைக் கவ்வியது. கடந்த தேர்தல் வரை தி.மு.க.வின் நிழலில் இளைப்பாறிய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஆட்சி மாறியவுடன் தவெக, பக்கம் சாய்ந்துவிட்டனர். அதுவும் மதுரையைச் சேர்ந்த எம்.பி வெங்கடேசன் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க.வினர் எப்படி உழைத்தார்கள் என்று அவருக்கே தெரியும். அவரும் இப்போது, 'கடந்த ஆட்சியில் எங்கள் கைகள் கட்டப்பட்டிருந்தன' என்று சொல்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் முதல்வர் ஸ்டாலினிடம் பவர்ஃபுல்லாக இருந்தவர். அதன் காரணமாகவே, இவரைத் தேடிவந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பார்க்கவில்லை என்பதற்காக ஒரே வாரத்தில் ஆகாஷ் ஐ.ஏ.எஸ். சிவகங்கைக்கு மாற்றப்பட்டார். ஆனால், இன்றைக்கு பதவிக்காக கலர் மாறும் பச்சோந்தியாக இருக்கிறார்.
மதுரையில் இன்றைய தேதியில் த.வெ.க. அரசின் அமைச்சர் நிர்மல்குமார் தான் செல்வாக்குடன் இருக்கிறார். அதனால் அவரது பக்கம் சாய்ந்துவிட்டார் வெங்கடேசன் எம்.பி. இந்த சூழலில், மதுரை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்வுசெய்யச் சொல்லி தேர்தல் ஆணையத்திடம் முறையிடவிருக்கிறோம். அவர்கள் உடனடியாக தேர்தல் அறிவிக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்கள்.
இதுபற்றி, மதுரை மாநகர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் தளபதியிடம் பேசினோம். "மதுரை மாநகராட்சிக்கு மேயர் காலியாக இருப்பதாக புதிய அரசாங்கம் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யமாட்டார்கள். தேர்தல் அறிவித்தால் தி.மு.க. தான் மேயர். த.வெ.க அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்தே எங்கள் வியூகம் இருக்கும்' என்றார்.
அரசியல் ஆதாயத்திற்காக வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.
What's Your Reaction?



