குதிரை பேர வழக்கில் புது ட்விஸ்ட்..  கைதாகிறார்களா கரூர் பிரதர்ஸ்?

தமிழக அரசியலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையேயான அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட உள்ளது. 

Jul 14, 2026 - 11:54
குதிரை பேர வழக்கில் புது ட்விஸ்ட்..  கைதாகிறார்களா கரூர் பிரதர்ஸ்?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்க்கும் நோக்கில், தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.

அதேநேரத்தில், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், தினமும் காலை மற்றும் மாலை விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்தும் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் விசாரணை அதிகாரி முன் ஆஜராகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், நீதிமன்றம் விதித்த நிபந்தனையை அவர்கள் மீறியுள்ளதாக காவல்துறை தரப்பில் கருதப்படுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவருக்கும் வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்ய காவல்துறை சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றம் அந்த மனுவை ஏற்று முன்ஜாமீனை ரத்து செய்தால், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் கைது செய்யப்படும் சூழல் உருவாகலாம் என சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், முன்ஜாமீனை ரத்து செய்யும் வகையில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ மனுவும் தாக்கல் செய்யப்பட்டதாக நீதிமன்ற பதிவுகள் வெளியாகவில்லை. அதேபோல், செந்தில் பாலாஜி அல்லது அசோக்குமார் தரப்பிலும் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனவே, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தின் நிலைப்பாடு மீது அரசியல் வட்டாரங்களின் கவனம் திரும்பியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow