முதலமைச்சர் விஜய்க்கு சவால்... உதயநிதி சொன்னது என்ன?

முதலமைச்சர் விஜய் தன்னிடம் மூன்று கோப்புகள் இருக்கின்றது என்று சட்டசபையில் கூறியுள்ள நிலையில், அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தைரியம் இருந்தால் திறந்து பார்க்க வேண்டியது தானே அதனை விட்டு பூச்சாண்டி காட்டுகின்றார் என்று விமர்சித்துள்ளார்.

Aug 25, 2026 - 09:34
முதலமைச்சர் விஜய்க்கு சவால்... உதயநிதி சொன்னது என்ன?

திமுகவின் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற “போராளி ஓய்வதில்லை” கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சியில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், “எந்த நிலையிலும் மக்களோடு மக்களாக நிற்கக்கூடிய இயக்கமாக திமுக திகழ்கிறது. தேர்தல் தோல்விக்கு சினிமா மாயை, சமூக வலைதளங்களின் தாக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டாலும், கொளத்தூர் சட்டசபை தொகுதியில் ஏற்பட்ட தோல்வியை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியாக மாற்ற வேண்டும்” என்றார்.

தேர்தலுக்கு முன்பு திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை இருந்ததாகக் கூறிய உதயநிதி, எதிரியைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் களமிறங்கியதால் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவித்தார். இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய ஆட்சிக்கு மக்கள் முழுமையான பெரும்பான்மையை வழங்கவில்லை என்றும், ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் 108 இடங்களே கிடைத்துள்ளதாகவும் உதயநிதி குறிப்பிட்டார். வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்தவர்கள் மாற்றம் தருவோம் எனக் கூறிவிட்டு, முந்தைய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றுவதையே செய்து வருவதாகவும், இதன் மூலம் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காமல் ஆளுங்கட்சியினர் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

சமீபத்தில் சட்டபேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய் திமுக கட்சி செய்த ஊழல் குறித்தான மூன்று கோப்புகள் எனது டேபிளிலில் உள்ளது என்றும் அதனை எப்போது திறந்து பார்க்க வேண்டும் என்றும், நீங்களா திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள் என்று பேசியிருந்தார். இது திமுக மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பேசிய போது உதயநிதி முதலமைச்சர் விஜய்க்கு தைரியம் இருந்தால் அந்தக் கோப்புகளை மக்கள் முன்பு வெளியிட வேண்டும் என்றும் உதயநிதி சவால் விடுத்துள்ளார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார்கள் வாங்கித் தரும் முடிவையும் விமர்சித்து விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய நிதி இல்லை என்று கூறிவிட்டு, ஆடம்பரச் செலவுகளுக்கு மட்டும் எங்கிருந்து நிதி கிடைக்கிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திட்டத்தை எதிர்த்து முதலில் குரல் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றியது திமுகவும் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் எனக் கூறிய உதயநிதி, தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும், ஆளும் அரசுக்கு உரிய நேரத்தில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow