"விராலிமலையை மாமாவுக்காக விட்டுக்கொடுத்தேன்..." - அமைச்சர் பர்வேஷ் பரபரப்பு பேச்சு!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷும் ஒரே மேடையில் பங்கேற்றனர். அப்போது தொகுதி அரசியல் மற்றும் எதிர்கால தேர்தல் பணிகள் குறித்து அமைச்சர் முகமது பர்வேஷ் பேசியது கவனம் பெற்றுள்ளது.
விராலிமலையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர். நிகழ்ச்சியை அமைச்சர் முகமது பர்வேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய விஜயபாஸ்கர், காவிரி - குண்டாறு திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.150 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக குறிப்பிட்டு, விராலிமலை தொகுதி மக்களின் சார்பில் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், தொகுதியில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் முகமது பர்வேஷ், விஜயபாஸ்கரை தனது மாமா எனக் குறிப்பிட்டு அவருக்கு வரவேற்பு தெரிவித்தார். விராலிமலை தொகுதிக்கு விஜயபாஸ்கர் வந்திருப்பது கட்சியின் வளர்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணிக்காக வந்திருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தலைமை தன்னிடம் விஜயபாஸ்கருக்கு என்ன செய்யலாம் என கேட்டபோது, எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது தொகுதியை அவருக்காக விட்டுக்கொடுக்கலாம் என தெரிவித்ததாக கூறினார்.
“எந்த அச்சமும் இல்லாமல், முதலில் கையெழுத்து போட்டது நான்தான்” எனக் கூறிய முகமது பர்வேஷ், சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தங்களைப் பற்றி பல்வேறு விதமாக செய்திகள் வெளியிடப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஆனால், தன்னுடைய நம்பிக்கை தனக்கு தெரியும் என்றும், அதனை நோக்கியே தொடர்ந்து பயணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் பணிகள் குறித்தும் அமைச்சர் முக்கிய வேண்டுகோளை முன்வைத்தார். வரவிருக்கும் இடைத்தேர்தலில் கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
மேலும், இடைத்தேர்தல் மட்டுமின்றி உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என எந்த தேர்தல் வந்தாலும், கட்சியில் புதிதாக இணைந்தவர்களையும் அரவணைத்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
விஜயபாஸ்கரின் வருகை மற்றும் விராலிமலை தொகுதி தொடர்பாக முகமது பர்வேஷ் தெரிவித்த கருத்துகள், அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
What's Your Reaction?



