விஜய் பிரசாரத்தில் பாகிஸ்தான் ADMIN-கள்..? பின்னணியில் இருப்பது யார்?
விஜய்... தமிழக வெற்றிக் கழகம்... தமிழ்நாடு அரசியல்... என பரபரப்பாக இயங்கி வரும் சில ஃபேஸ்புக் பக்கங்களின் பின்னணியில் பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜயை ஆதரித்து செயல்படுவது போல் தோற்றமளிக்கும் சில சமூக வலைதள பக்கங்கள், உண்மையில் பாகிஸ்தானில் இருந்து நிர்வகிக்கப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
இதில் முக்கியமாக பேசப்படும் விஷயம் என்ன தெரியுமா? விஜய்க்காக ஆரம்பிக்கப்பட்ட பக்கங்கள் அல்ல அவை... ஏற்கெனவே வேறு பெயர்களில் இயங்கி வந்த பக்கங்கள் பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதுதான்!
ஒரு பக்கம்... பல முகங்கள்:
விசாரணையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தின் பெயர் காலப்போக்கில் பலமுறை மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் “Tahiru Quadri Fan's 2.0” என்ற பெயரில் இருந்ததாகக் கூறப்படும் அந்தப் பக்கம், பின்னர் “Fan Of Owaisi”, அதன் பிறகு “Ayatullah Khamenie Fans” என்ற பெயர்களில் இயங்கியதாகவும், இறுதியில் “Vijay Thalapathy TVK” என்ற பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய அரசியல் தொடர்பான ரசிகர் பக்கமாக இருந்த ஒன்று, திடீரென தமிழ்நாடு அரசியல் மற்றும் விஜய்க்கான ஆதரவு பக்கமாக எப்படி மாறியது? இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? அந்தப் பக்கங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பாகிஸ்தான் அட்மின்கள்:
ஃபேஸ்புக்கில் உள்ள Page Transparency தகவல்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டில், விஜய் மற்றும் தவெக தொடர்பான சில பக்கங்களை நிர்வகிப்பவர்களின் இருப்பிடம் பாகிஸ்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சமூக வலைதள கணக்குகளுடன் +92 என்ற பாகிஸ்தான் தொலைபேசி குறியீடு இணைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சில கணக்குகளில் பாகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் ரசிகர் பக்கம் போல தோற்றமளிக்கும் ஒரு கணக்கை திறந்து பார்க்கும்போது, அதன் நிர்வாகத் தகவல்கள் இந்தியாவுக்கு வெளியே இருப்பதாக தெரிய வருகிறதா என்ற கேள்விதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பழைய பக்கம்... புதிய அரசியல் பிரசாரம்:
இந்த விவகாரத்தின் பின்னணியில் மற்றொரு முக்கியமான சந்தேகமும் முன்வைக்கப்படுகிறது. ஏற்கெனவே அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பவர்களையும், சமூக வலைதள ஈடுபாட்டையும் கொண்ட பக்கங்களை வாங்கி அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பின்னர் அவற்றின் பெயர் மற்றும் அடையாளத்தை மாற்றி அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்த முடியுமா?
புதிதாக ஒரு பக்கத்தை தொடங்கி பின்தொடர்பவர்களை சேர்ப்பதற்குப் பதிலாக, ஏற்கெனவே இயங்கி வரும் பக்கத்தை மறுபிராண்டிங் செய்வதன் மூலம் அதன் பழைய Reach மற்றும் Engagement-ஐ அரசியல் உள்ளடக்கங்களுக்கு பயன்படுத்த முடியும் என்ற கோணமும் முன்வைக்கப்படுகிறது.
அதாவது, பழைய Followers... புதிய பெயர்... புதிய அரசியல் முகம். இதுவே இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
‘Vijay for PM’ பிரசாரத்துடன் தொடர்பா:
விஜயை தேசிய அளவிலான தலைவராக முன்னிறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே ஒருங்கிணைந்த பிரசாரங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக “Vijay for PM” என்ற கோணத்தில் பல மொழிகளில் உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவது, AI மூலம் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பயன்படுத்தப்படுவது, விஜய்க்கு தமிழ்நாட்டுக்கு வெளியேயும் பெரும் ஆதரவு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையிலான பிரசாரங்கள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
வாரணாசி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்பது போன்ற வீடியோக்களில், விஜயை அடுத்த பிரதமராக ஆதரிப்பது போன்று காட்சிகள் இடம்பெற்றதாகவும், அவற்றை உருவாக்கிய சில சமூக வலைதள பிரபலங்கள் கட்டண விளம்பர ஒத்துழைப்புகளை மேற்கொள்வதாக வெளிப்படையாக குறிப்பிடுவதாகவும் அமைந்துள்ளன.
இதனால், விஜய்க்கு இயல்பாக உருவாகும் ஆதரவை விட, சமூக வலைதளங்கள் மூலம் திட்டமிட்டு ஒரு ‘மாஸ் இமேஜ்’ உருவாக்கப்படுகிறதா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
லைக்குகளிலும் சந்தேகம்:
விஜய்க்கு இருந்த Followers எண்ணிக்கையை விட சில பதிவுகளுக்கு கிடைத்த லைக்குகள் மற்றும் வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்ததாகக் கூறப்படும் அதிகப்படியான engagements, அந்த எண்ணிக்கைகள் இயல்பானதா என்ற விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இதுபோன்ற சூழலில், இப்போது பாகிஸ்தானில் இருந்து நிர்வகிக்கப்படுவதாகக் கூறப்படும் சில ஃபேஸ்புக் பக்கங்களும் விஜய் மற்றும் தவெக ஆதரவு உள்ளடக்கங்களை வெளியிட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.
யார் நடத்துகிறார்கள் இந்த பக்கங்களை?
இந்த விவகாரத்தில் தற்போது எழும் மிகப்பெரிய கேள்வி இதுதான். தமிழ்நாட்டு மக்களை இலக்காகக் கொண்டு செயல்படும் விஜய் ஆதரவு பக்கங்களை இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்கள் ஏன் நிர்வகிக்க வேண்டும்? அவை உண்மையான விஜய் ரசிகர்களால் நடத்தப்படுகின்றனவா? அல்லது ஏற்கெனவே இருந்த சமூக வலைதள பக்கங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படுகின்றனவா? இந்தப் பக்கங்களுக்கான நிதி அல்லது நிர்வாக ஆதரவு எங்கிருந்து வருகிறது? விஜய் மற்றும் தவெகவை ஆதரிக்கும் டிஜிட்டல் பிரசாரங்களுடன் இந்தக் கணக்குகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்விகள் தற்போது முன்வைக்கப்படுகின்றன.
ஒருபுறம் ‘Vijay for PM’ பிரசாரம்... மறுபுறம் பெயர் மாற்றப்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள்... இப்போது பாகிஸ்தான் நிர்வாகிகள் தொடர்பு என்ற குற்றச்சாட்டு. விஜயின் டிஜிட்டல் அரசியல் பிரசாரத்தைச் சுற்றி எழுந்துள்ள இந்த புதிய சர்ச்சைக்கு, தவெக தரப்பு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
What's Your Reaction?

