ஈழத்திலும் தவெக? சீமானுக்கு சவால்விடும் இராமநாதன் அர்ச்சுனா..!

ஒருபக்கம் முதல்வர் விஜய்க்கு புகழ் மாலை... மறுபக்கம் நாம் தமிழர் சீமானை சுட்டுவிடுவேன் என கொலை மிரட்டல்... இப்படி தடாலடியாக பேசி தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறார் இலங்கை யாழ்ப்பாணம் எம்.பி. டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா. அவர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு அளித்த எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்...

ஈழத்திலும் தவெக? சீமானுக்கு சவால்விடும் இராமநாதன் அர்ச்சுனா..!

'தமிழகத்தில் த.வெ.க. தான் ஆட்சி அமைக்கும்' என்று தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே திட்டவட்டமாக கூறினீர்களே... எப்படி துல்லியாக கணிக்க முடிந்தது?

"நேபாளத்தில் நடந்ததுபோல் தமிழக மக்களும் மாற்றம் வேண்டுமென்ற சிந்தனையில் இருந்ததை என்னால் உணர முடிந்தது. ஆகவே, அரசியல் மாற்றம் கட்டாயம் ஏற்படும் என நம்பினேன்."

சமூக ஊடக பிரசாரம் மூலம் விஜய் ஆட்சியை பிடித்துவிட்டார் என்ற விமர்சனம் குறித்து?

"சீமான், சாட்டை துரைமுருகன் போன்றவர்கள் முதல்வர் விஜய்யை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். அப்படி பார்த்தால் அவர்கள் ஐந்து தொகுதிகளிலாவது வென்றிருக்க வேண்டும் அல்லவா. எனவே அப்படியான விமர்சனம் தவறானது. விஜய்யை தமிழகத்தின் தலைவராக மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்"

தி.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து உங்கள் கருத்து என்ன?

'எதிரியை குறைவாக எடை போட்டதுதான் அவர்கள் செய்த பிழை, த.வெ.க.வை நேரடியாக எதிர்க்காமல், சீமானுக்கு பணம் கொடுத்து அவர் மூலமாக விஜய்யை எதிர்க்க வைத்தது முட்டாள்தனம். விஜய்யை தற்குறி, கரகாட்டக்காரன் என சீமான் விமர்சனம் செய்ததை ஏற்றுக்கொள்ளாத தமிழக மக்கள், 'நாங்கள் முட்டாள்கள் இல்லை' என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்."

விஜய் ரசிகர்களே பொறாமைப்படுகிற அளவுக்கு, அவரை கடவுள் ரேஞ்சுக்கு புகழ்ந்து பேசிவருகிறீர்களே?

"இலங்கையில் நான் வளர்ந்த சூழல் காரணமாக எனக்கு சினிமா மோகம் சுத்தமாக இல்லை. விஜய் நடித்த படங்களின் பெயர்கள்கூட தெரியாது. ஆனால், ஓர் அரசியல் ஆளுமையாக அவரை மிகவும் பிடிக்கும். அதோடு, தேர்தல் பிரசார நேரத்தில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை அவர் அழகாக கடந்து போயிருக்கிறார். அவருடைய அந்த அரசியல் அணுகுமுறை எனக்கு இப்போதும் ஒரு பாடமாக இருக்கிறது."

இப்படி நீங்கள் புகழும் அளவுக்கு தமிழக அரசியலில் விஜய் என்ன சாதித்துவிட்டார்?

"அரசியல்வாதிக்கு எந்த அனுபவமும் தேவையில்லை. எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் சுயேட்சையாக வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றவன் நான். மக்களுக்கு உண்மையாக இருப்பவர்தான் உண்மையான தலைவர். மக்களுக்கு என்ன தேவையோ அதைத் தேடிக் கொடுக்கும் பண்பு விஜய்யிடம் உள்ளது. அதோடு, தமிழீழ மக்களின் பணத்தில் சீமான் போன்றவர்கள் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், விஜய் அமைதியாக அரசியல் செய்கிறார்."

ஆனால், 'எல்லா விஷயங்களுக்கும் விஜய் அமைதி காக்கிறார்' என்ற விமர்சனமும் இருக்கிறதே?

"எங்களுடைய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், ஆண்டில் ஒரே ஒரு நாளில் மட்டும்தான் பேசுவார். அந்த பேச்சிற்காக ஒட்டுமொத்த தமிழ் இனமும் காத்திருக்கும். அதுபோல, முதல்வர் விஜய் பேசவில்லை என்று சொல்கிறவர்கள், அவர் பேசும்வரை காத்திருக்க வேண்டும். எதற்கும் பதில் சொல்லாமல் இருக்கின்ற விடயம்கூட என்னைப் பொறுத்தவரை ஆளுமை என்றுதான் பார்க்கிறேன்."

முதல்வர் விஜய்யை நீங்கள் இவ்வளவு புகழ்ந்து பேசியும், அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையே?

"ஒரு ஊடக நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் குறித்து பேசுவதற்காக, நான் தமிழ்நாடு வந்தேன். இலங்கை எம்.பி.யாகவோ, முதல்வர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்பதற்காகவோ வரவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. குரளி வித்தை காட்டுபவர்களை இதுவரை அமைச்சர்களாகப் பார்த்துவிட்டு, ஒரு விளையாட்டு வீரரான ஆதவ் அர்ஜுனாவை அமைச்சராக பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆதவ் தனது அலுவலகத்திற்கு அழைத்து, தனது டிபன் கேரியரில் இருந்து சாப்பாடு கொடுத்து உபசரித்தார். அமைச்சர்கள் காட்டிய பாசமே, முதல்வரைச் சந்தித்ததற்கு சமமானதாக இருந்தது.

இலங்கை அரசியலிலும் விஜய்யின் பங்கு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?

"மேதகு பிரபாகரனுக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள உலகத் தமிழர்கள் தயாராக இல்லை. இந்த நிலையில் உலக மக்களுடைய தலைவனாக விஜய்யை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அதைத் தமிழ் ஈழத்தில் செய்ய வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. தமிழ் ஈழத்தில் அதற்குரிய வேலைகளை நான் செய்வேன்.”

பிரபாகரனுக்குப் பிறகு விஜய் தான் உலக தமிழர்களின் தலைவர் என்று சொல்வது கொஞ்சம் ஓவராக இல்லையா?

"ஓர் இனத்திற்காக தன் குடும்பத்தையே இழந்த மேதகு பிரபாகரனுடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவரை நாங்கள் கடவுளாகப் பார்க்கிறோம். அவரது வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது. விஜய் அண்ணா அதை நிரப்புவாரா என்பதை காலம்தான் தீர்மானிக்க முடியும்."

என் கையில் துப்பாக்கி இருந்திருந்தால் சீமானை சுட்டுக் கொலை செய்திருப்பேன்' என்று நீங்கள் ஆத்திரப்படும் அளவுக்கு அவர்மீது என்ன கோபம்?

சீமானோடு நான் வம்பு சண்டைக்கு போகவில்லை. மே 18ம் தேதி கூட்டத்தில் சீமான் பேசும்போது, 'நாமல் ராஜபக்ஷேவின் நாய் என்று என்னைப் பற்றி பேசினார். ஒரு அயல்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரை இப்படி பேசலாமா? எங்களுடைய புலம்பெயர்ந்த உறவுகள் தந்த பிச்சைக் காசில் நடந்த கூட்டத்தில், 27 ஆயிரம் ஈழத்தமிழர் வாக்குகளால் தேர்வு செய்யப்பட்ட என்னை இப்படி விமர்சிக்கலாமா? அதோடு, ஆறு மாதம் தாண்டி நீ இந்தியாவுக்கு வந்திருந்தால், நான் உன்னை இல்லாமல் பண்ணி இருப்பேன்' என்று பேசியிருக்கிறார். இனத்துரோகியான சீமானுக்கு அவ்வளவு துணிவு இருக்கும் என்றால், எங்களுக்கு எவ்வளவு துணிவு இருக்கும்? சீமான் மானமுள்ள ஆள் என்றால், யாழ்ப்பாணத்தில் வந்து இதைச் சொல்லி இருக்க வேண்டும். அவரை மேலே அனுப்பி இருப்பேன்."

ஈழத்தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், காங்கிரஸோடு விஜய் கூட்டணி வைத்திருக்கிறாரே?

"காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருப்பது காலத்தின் தேவை. அந்தக் கூட்டணியில் இருந்துகொண்டு, தமிழீழ மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அப்போது நான் எதிர்ப்பேன்."

இன்றைய தேதியில் தனி ஈழம் சாத்தியமா?

"தனி ஈழம் சாத்தியமான ஒன்றுதான். 1960ல் கருப்பின மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கான நியாயம் 2000ம் ஆண்டில்தான் கிடைத்தது. அதேபோல 2009ல் நடந்த முள்ளி வாய்க்கால் படுகொலை, இன்னும் நூறாண்டுகள் தாண்டியும் நிரூபிக்கப்படலாம். தற்சமயம் எங்களுடைய போராட்டம் தோல்வியடைந்து இருக்கிறது. ஆகவே, நாங்கள் இங்கே அமைதியாக இருக்க விரும்புகிறோம். ஆனால், ஒவ்வொரு தமிழரின் மனதிலேயும் தமிழீழம் என்பது ஒரு கனவு. அதை யாராலும் மாற்ற இயலாது."

தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷேவின் மகன் நமல் ராஜபக்ஷேவை உங்களது உயிர் நண்பன் என்று சொல்லியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறதே?

"இலங்கை ஜனாதிபதியாக ராஜபக்க்ஷே இருந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையில் மூன்றாவது இடத்தில் என் தந்தை ராமநாதன் இருந்தார். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் போரின்போது என் தந்தையின் கண்களை தோண்டி, சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். அப்படி என் தந்தையைக் கொலை செய்த ஒருவரின் மகனோடு ஆருயிர் நண்பனாக இருக்க முடியுமா? எனக்கு சிங்களம் நன்றாகத் தெரியும். சிங்கள மக்களுக்கு சிங்கள மொழியில் எங்கள் வலிகளை நான் சொல்கிறேன். அப்போது, நாமல் ராஜபக்க்ஷே எங்களது வலிகளை புரிந்துகொள்ளட்டும் என்று சொல்லி இருக்கிறேன். அதோடு, நாமல் ராஜபக்ஷேவும் நானும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள். இருவரும் கத்தியால் குத்திக்கொள்வதுதான் அரசியல் என்று நினைத்தால் அது முட்டாள்தனம்."

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன?

"கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்த நாள் முதல் இந்த பிரச்னை இருக்கிறது. இது அண்ணன் தம்பி பிரச்னை. தமிழக முதல்வரின் அனுமதியோடு, இலங்கையிலிருந்து மீனவர்களைக் கூட்டி வந்து, இந்திய மீனவச் சங்கங்களோடு பேசி, தீர்வு காண நான் தயாராக இருக்கிறேன்."

தமிழக முதல்வர் விஜய்யை சந்திக்கும்போது, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பீர்களா?

"உலகம் முழுவதும் விடுதலை புலிகளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் இதுதொடர்பாக முதல்வர் விஜய்யிடம் எந்த கோரிக்கையையும் வைக்க மாட்டேன். அப்படி கோரினால் தேவையில்லாத அரசியல் சஞ்சலங்களை ஏற்படுத்தும்."

 -         எஸ்.கோவிந்தராஜ்

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow