பகடைக் காயாக மாறும் சௌமியா?... கடந்த காலத்தை மறைக்கப் பார்க்கிறதா பாமக?

சட்டமன்றத்தில் மக்களின் பிரச்னைகளுக்காக துணிச்சலாகக் குரல் எழுப்பி வருகிறார் என்று சௌமியா அன்புமணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இவரை முன்னிறுத்தி பாமக தனது கடந்தகால சர்ச்சைகளை மறைக்க முயல்கிறதா? என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன் வைக்கின்றனர்.

Sep 9, 2026 - 12:15
பகடைக் காயாக மாறும் சௌமியா?... கடந்த காலத்தை மறைக்கப் பார்க்கிறதா பாமக?
Soumya Anbumani

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனுபவம் வாய்ந்த எம்எல்ஏக்கள், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களுக்கு இணையாகவும், சில நேரங்களில் அவர்களைவிட சிறப்பாகவும் மக்கள் பிரச்னைகளை சௌமியா அன்புமணி முன்வைத்து வருவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் பேச்சுகளும், சௌமியா அன்புமணியின் சட்டமன்ற உரைகளும் அரசியல் எல்லைகளைத் தாண்டி பொதுமக்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, மக்களின் குரலாக சௌமியா அன்புமணி செயல்பட்டு வருகிறார் என்ற பாராட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

இந்நிலையில், “மக்களின் குரலாக இருப்பது பாமகதான்” என்ற பிம்பத்தை சௌமியா அன்புமணியின் சட்டமன்ற செயல்பாடுகள் மூலம் கட்சி உருவாக்க முயற்சிக்கிறதா? அதேவேளையில், பாமக மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட சாதி ரீதியான குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளை இந்தப் புதிய அரசியல் பிம்பம் மறைத்துவிடுமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுகின்றன.

இளவரசன் – திவ்யா விவகாரம்

2012ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
நத்தம் காலனி உள்ளிட்ட மூன்று தலித் கிராமங்கள் தாக்கப்பட்டதுடன், 260க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும், பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தச் சம்பவங்களுக்கு முன்னதாகவே, பாமக நிறுவனர் ராமதாஸ், தலித் இளைஞர்கள் பிற சமூகங்களைச் சேர்ந்த பெண்களை காதலித்து திருமணம் செய்வதை ‘நாடகக் காதல்’ என விமர்சித்து பல்வேறு பொது மேடைகளில் பேசி வந்தார். இளவரசன் – திவ்யா விவகாரம், இந்த அரசியல் நிலைப்பாட்டை மேலும் தீவிரப்படுத்த பயன்படுத்தப்பட்டதாக விமர்சகர்கள் கூறினர்.

திவ்யாவின் தந்தை நாகராஜ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தருமபுரியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பாமகவுக்கு தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பாமக தொடர்ந்து மறுத்து வந்தது.

நீதிமன்றத்தில் திவ்யா அளித்த வாக்குமூலம்

தனது மகளைக் காணவில்லை எனக் கூறி திவ்யாவின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் திவ்யாவின் தாயார் தரப்பில் பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா, ஆரம்பத்தில் இளவரசனுடன் வாழ விரும்புவதாகவும், அவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர், 2013ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், தனது தாயாருடன் இருக்க விரும்புவதாகவும், இனிமேல் இளவரசனுடன் வாழப்போவதில்லை என்றும் திவ்யா தெரிவித்தார்.

திவ்யாவின் இந்த முடிவுக்குப் பின்னால் சமூக மற்றும் குடும்ப ரீதியான அழுத்தங்கள் இருந்ததாக சில தலித் அமைப்புகள் குற்றம்சாட்டின. ஆனால், இதுகுறித்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் நீதிமன்றத்தால் எந்தத் தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இளவரசனின் மரணம்

திவ்யா இளவரசனை விட்டுப் பிரிந்ததாகக் கூறப்பட்ட மறுநாளான 2013ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது மரணம் தற்கொலை அல்ல என்றும், திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் சில தலித் அமைப்புகள் சந்தேகம் எழுப்பினர். இதனால், இந்தச் சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேநேரத்தில், காவல்துறை விசாரணையில் இளவரசன் தற்கொலை செய்துகொண்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு ஆணையம், இளவரசனின் மரணம் கொலை அல்ல என்றும், காதல் தோல்வியால் ஏற்பட்ட தற்கொலை என்றும் தனது அறிக்கையில் தெரிவித்தது. இந்த அறிக்கையை மேற்கோள்காட்டிய பாமக நிறுவனர் ராமதாஸ், தங்கள் கட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதாக அப்போது தெரிவித்தார்.

சாதி அரசியல் குறித்த சர்ச்சை

இளவரசன் – திவ்யா விவகாரம் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் சாதி அரசியலின் தீவிரமான முகம் குறித்து நடைபெற்ற முக்கியமான விவாதங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வன்னியர் சமூகத்தின் வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பாமக சாதி அடையாள அரசியலை முன்னெடுத்ததாக அதன் விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை பாமக மறுத்து வருகிறது.

அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்த காலகட்டத்தில், தலித் மக்களை ஈர்க்கும் முயற்சியாக பாமக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. ஆனால், அந்த முயற்சியால் எதிர்பார்த்த அரசியல் பலன் கிடைக்கவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதன்பின்னர், பாமக மீண்டும் தனது பாரம்பரிய வாக்கு வங்கியை மையப்படுத்திய அரசியலை நோக்கித் திரும்பியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

புதிய பிம்பம்... பழைய சர்ச்சைகள் மறக்கப்படுமா?

ஆரம்பத்தில் எளிய மக்களின் உரிமைகளைப் பேசும், சமூகநீதியை முன்னிறுத்தும் கட்சியாக இருந்தாலும், மறுபுறம் சாதிய அரசியல் சக்தியாக மாறியது. ஒவ்வொரு முறை அரசியல் ரீதியாகச் சறுக்கல்களைச் சந்திக்கும்போதெல்லாம் சாதியை கையில் எடுக்கவும், அரசியல் வெற்றிகளுக்குப் பின் வளர்ச்சியைப் பேசுவது எனவும் அதன் போக்கு மாறி மாறி இருந்து வந்தது. முக்கியமாக, திமுக - அதிமுக இரு கட்சிகள் மீதும் மாறி மாறிப் பயணித்து, பேரத்தை உயர்த்திக்கொள்ளும் உத்தியையும் அது கையாண்டது மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது.

இந்நிலையில் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து பேசும் சௌமியா அன்புமணிக்கு அரசியல் கட்சிகளைத் தாண்டி பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. மக்கள் பிரச்னைகளைப் பேசும் ஒரு புதிய தலைமுறை அரசியல் முகமாக சௌமியா அன்புமணியை பாமக முன்னிறுத்துவது அக்கட்சிக்கு அரசியல் ரீதியாக புதிய பிம்பத்தை உருவாக்கும் முயற்சியாக இருக்கலாம் என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.

அதேநேரத்தில், கடந்த காலங்களில் பாமக மீது முன்வைக்கப்பட்ட சாதி அரசியல், தருமபுரி வன்முறை மற்றும் இளவரசன் – திவ்யா விவகாரம் போன்ற சர்ச்சைகள் இன்னும் அரசியல் விவாதங்களில் இடம்பெற்று வருகின்றன.

எனவே, சௌமியா அன்புமணியின் சட்டமன்ற செயல்பாடுகள் மூலம் பாமக தனது கடந்த கால அரசியல் சர்ச்சைகளிலிருந்து விலகி, “மக்களின் குரல்” என்ற புதிய அடையாளத்தை உருவாக்க முயற்சிக்கிறதா? அல்லது சௌமியா அன்புமணியின் செயல்பாடுகள் உண்மையிலேயே பாமகவின் அரசியல் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் வெளிப்பாடா?

சௌமியாவை முன்னிறுத்தி, பாமக தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறைக்கப் பார்க்கிறதா? என்ற கேள்வி, தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow