மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற.. பிரத்யேக நட்சத்திர பலன்கள்!
உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி
தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பிரத்யேக நட்சத்திர பலன்கள்!
- யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ செல்வங்கள் பொதுத்தேர்வுகளை எழுத தொடங்கி இருக்கிறார். அதே போன்று 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும் மாணவ செல்வங்கள் இறுதித்தேர்வை எழுத போகிறார்கள். தேர்வுகளை எழுத இருக்கும் மாணவசெல்வங்களுக்கான நட்சத்திர பலன்களை பார்ப்போம்.
உத்திராடம்
அமைதியாகவும் திட்டமிட்டும் செயல்படக் கூடியவர் நீங்கள். உங்களின் மாணவப்பருவம், சூரியதசை முதல் செவ்வாய், தசை வரை இருக்கும். ஒரு சிலருக்கு ராகு தசையிலும் படிப்பு தொடரலாம். கவனமாகவும், நேரம் தவறாமலும் எதையும் செய்யக்கூடிய நீங்கள் பிடிவாதத்தையும், வீண் கோபத்தையும் தவிர்த்தால் விசேஷ பலன்களைப் பெறலாம். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாமல் ஏற்பது நல்லது.
வெளிநாட்டுக்கல்வி வாய்ப்பு உங்களுக்கு எளிதாகக் கைகூடும். அதேசமயம் புதிய அறிமுகங்களிடம் ரகசியம் பகிர்ந்தால் ஏமாற்றப்படலாம். எச்சரிக்கையாக இருங்கள். வங்கிக்கடன் முயற்சிகளை பெற்றோர் உதவியுடன் செய்யுங்கள். மனதைக் கட்டுப்படுத்துவது நல்லது. ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடப் பழகுங்கள். உங்கள் மனம் தானாகவே அமைதியாகும். கண்கள், நரம்பு, ஒற்றைத் தலைவலி பாதிப்புகளை உடனுக்குடன் கவனியுங்கள்.
வியாழக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்டதெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகள் எதையும் தொடங்கும் முன் பக்கத்துக் கோயில் அம்பாளை தரிசனம் செய்யுங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை திருவானைக்காவல் சென்று அகிலாண்ட நாயகியை ஆராதிப்பது சிறப்பான பலன் தரும். மாணவப்பருவம் நிறைவடைந்ததும், மேல்மலையனூர் சென்று அங்காள பரமேஸ்வரியை அகம் ஒன்றி வழிபடுங்கள். உங்கள் வாழ்க்கை மேன்மை பெறும்.
திருவோணம்
தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றிபெறக்கூடியவர் நீங்கள். சந்திர தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகு தசை வரை தொடரும். படிப்பில் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் நீங்கள், தன்னம்பிக்கை இருந்தாலும் தெளிவான திட்டமிடல் முக்கியம் என்பதை உணர்ந்தால் எல்லாமே வெற்றியாகும்.
அதீத நம்பிக்கையால் எதிலும் கடைசி நேரத்தில் அவசரமாகச் செயல்படுவதும் உங்கள் குணம். அதைத் தவிர்த்து படிப்படியாக முயற்சிகளைத் தொடர்வதும், குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பதும் நன்மை தரும்.
வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் கைகூடி வரும்போது பெற்றோர் ஆலோசனை கேட்டுச் செயல்பட்டால், முன்னேற்றம் முடுக்கிவிடப்படும். கல்விக்கடன் தொகையைப் பெற முறையான முயற்சிகள் மட்டுமே உதவும். மன அழுத்த உபாதைகள், எலும்புத் தேய்மானம், நரம்புக் கோளாறுகளில் அலட்சியம் கூடாது.
வெள்ளிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளின்போது அனுமனை வழிபாடு செய்யுங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை சங்கரன் கோவில் சென்று கோமதி அம்மனை தரிசியுங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், ஸ்ரீரங்கம் சென்று பள்ளிகொண்ட பெருமாளை தரிசியுங்கள். உங்கள் மனம் போல் வேலை கிடைத்து வாழ்க்கை வெளிச்சமாகும்.
அவிட்டம்
ஞாபகசக்தியும் கற்பூர புத்தியும் உள்ளவர்கள் நீங்கள். செவ்வாய் தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதசை வரை இருக்கும். துணிவுடன் செயல்படக்கூடிய நீங்கள் பணிவும் உங்கள் செயல்களில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால், வெற்றி உங்கள் வசமாகும்.
மனதில் ஏற்படும் வீண் குழப்பங்களை வளரவிடாமல் தடுக்க தியானம், யோகா பழகுவது நல்லது. இளம் வயதிலேயே ஏதாவது ஒரு கலையைப் பழகுவதும், உடலில் இருந்து வியர்வை நன்கு வெளியேறும்படியான உடற்பயிற்சிகளைச் செய்வதும் உங்கள் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும். தெளிவான மனதில் பாடங்கள் பதியும்.
நட்புகளின் கட்டாயத்திற்காக எதையும் செய்யாமல், உங்கள் பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டல்படி நடப்பது சிறந்தது. அயல்நாட்டுக் கல்வி வாய்ப்பு முயற்சிகளால் கைகூடும். தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. கூடாத நட்புகளைக் கழட்டிவிடுவதில் தயக்கம் கூடவே கூடாது. தேமல், ரத்தத் தொற்றுநோய், வயிறு உபாதைகளில் அலட்சியம் தவிர்ப்பது அவசியம்.
வெள்ளிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். 3 ஆண்டிற்கு ஒருமுறை திருப்பதி சென்று வழிபட்டு வாருங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், அகோபிலம் சென்று நரசிம்மரை ஆராதித்து வாருங்கள். உரிய பணி கிடைத்து வாழ்க்கை உன்னதமாகும்.
சதயம்
சட்டென எதையும் புரிந்துகொள்ளும் ஆற்றல்மிக்கவர்கள் நீங்கள். ராகு தசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு தசை வரை தொடரும். கற்றவை எதையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்வதும், சரியான சமயத்தில் அதனை உபயோகப்படுத்துவதும் உங்கள் குணம். அதனால் ஆணவம் அதிகரித்துவிடாமலும், அலட்சியம் வந்துவிடாமலும் பார்த்துக்கொண்டால் மற்றவர்களின் ஆதரவும் அதிகரிக்கும். உங்கள் மதிப்பும் உயரும்.
வெற்றி எப்போதும் உங்களுக்கு எட்டும் தொலைவிலேயே இருக்கும் என்றாலும், வீண் பிடிவாதத்தாலும், அநாவசிய கோபத்தாலும் நீங்கள் அதை இழப்பீர்கள். விட்டுக்கொடுத்துப் போவதும், சினம் தவிர்ப்பதும் சீரான நன்மையைத் தரும்.
நட்பு வட்டாரத்தில் முகத்திற்கு முன் புகழ்ந்து முதுகுப் பக்கம் இகழும் நட்புகளை அடையாளம் கண்டு விலக்குவது நல்லது. வெளிநாட்டுக் கல்வி முயற்சி, கல்விக்கடன் முயற்சிகள் மனம்போல் கிட்டும். முதுகு எலும்பு பாதிப்பு, வயிற்று உபாதைகள், சுவாசத் தொல்லைகளில் உடனடி சிகிச்சை எடுப்பது நல்லது.
புதன்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் பக்கத்து கோயிலில் துர்க்கையைத் துதித்து வாருங்கள். மூன்று வருடத்திற்கு ஒருமுறை திருநாகேஸ்வரம் சென்று வழிபடுங்கள். மாணவப் பருவம் நிறைந்ததும் வைத்தீஸ்வரன் கோயில் சென்று சுவாமி, அம்பாளோடு அங்காரகனையும் வழிபடுங்கள். உங்கள் வாழ்வு செழிப்பாகும்.
பூரட்டாதி
இயல்பாகவே எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர் நீங்கள். குருதசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம் சனிதசை வரை தொடரும். புத்திசாலித்தனமும் ஞாபக சக்தியும் உள்ளவர் நீங்கள். பலரால் பாராட்டப்படுமளவு பெருமை பெறுவீர்கள். அதேசமயம் சோம்பலால் கடைசி நிமிடம் வரை எதையும் ஒத்திப்போடுவதும், பிறகு அவசர அவசரமாகச் செயல்படுவதுமே உங்கள் குறை என்பதை உணர்வது நல்லது.
அயல்நாட்டுக் கல்விவாய்ப்புகள் வரும்போது நீங்கள் அதைத் தவிர்ப்பது உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கும். புதிது புதிதாகப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்வதும் கிணற்றுத் தவளையாக இருப்பதைத் தவிர்ப்பதும் அவசியம். உணர்ந்து செயல்படுங்கள். கல்விக்கடன்கள் முறையான முயற்சிகளால் கைகூடும். நட்பில் அதீத நெருக்கம் தவிர்ப்பது அவசியம்.
அலர்ஜி, அஜீரணம், சளித்தொல்லை பாதிப்புகளில் உடனடி சிகிச்சை அவசியம். தினமும் அதிகாலையில் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.
வியாழக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளின்போது, பக்கத்திலுள்ள சிவாலயம் சென்று வாருங்கள். 3 வருடத்திற்கு ஒருமுறை சங்கரன்கோவில் சென்று ராகவேந்திரரை தரிசியுங்கள். மாணவப்பருவம் முடிந்ததும், திருச்செந்தூர் சென்று முருகனை அர்ச்சித்து வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை பசுமையாகும்.
உத்திரட்டாதி
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறக்கூடியவர் நீங்கள். சனிதசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம், புதன்தசை வரை தொடரும். திட்டமிட்டும் குறிப்பிட்ட நேரத்திலும் செய்வதும் உங்கள் குணம். அதேசமயம், உங்கள் தீர்மானம் மட்டுமே சரியானது என்ற விடாப்பிடியான குணம் தவிர்ப்பது அவசியம். பிறரைப் பாராட்டும் குணமும் இருந்தால் பலரின் பாராட்டு உங்களுக்குக் கிட்டும்.
இந்த நட்சத்திரக் குழந்தைகளை பெற்றோர் யாருடனும் ஒப்பிட்டுக் குறைசொல்லிப் பேசாமலும், அன்பு காட்டியும் வளர்த்தால் இவர்கள் மாணவப் பருவத்தில் சாதனைகள் பல புரிவார்கள்.
எதிலும் முதன்மையானவராகத் திகழவேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர் நீங்கள். நட்பு வட்டாரத்தில் எதிர்பாலரிடம் அதிக நெருக்கம் தவிருங்கள். முயற்சிகளில் தளராமல் இருந்தால், உங்களுக்கு வெளிநாட்டுக்கல்வி வாய்ப்பு எளிதாகக் கைகூடும். ரத்தசோகை, அடிவயிறு உபாதைகள் வரலாம். உடன் மருத்துவம் உத்தமம்.
திங்கட்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன், பக்கத்திலுள்ள அம்மன் கோயிலுக்குப் போய் வாருங்கள். மூன்று வருடத்திற்கு ஒருமுறை மந்திராலயம் சென்று ராகவேந்திரரையோ ஷீரடி சென்று சாயிபாபாவையோ வணங்குங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தூய மனதோடு துதித்து வாருங்கள். உங்கள் வாழ்வு ரம்யமாகும்.
ரேவதி
பொறுமையாகச் செயல்பட்டு பெருமை பெறக் கூடியவர் நீங்கள். புதன் தசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேதுதசை வரை தொடரும். சிலருக்கு சுக்ர தசையிலும் தொடரலாம். இயல்பாகவே அறிவாற்றல் மிக்கவர் நீங்கள். அதேசமயம் வீண் புகழ்ச்சிக்கு மயங்குவதால், அறிவே சிலசமயங்களில் அகந்தையாக மாறி விடும். தற்பெருமையும் தலைக்கனமும் தவிர்ப்பது நிலையான வெற்றிக்கு வழியாக அமையும்.
அயல்நாட்டுக் கல்விக்கு உரிய முயற்சிகளில் ஈடுபடும்போது, தகுந்த நபர்களிடம் மட்டுமே ஆலோசனை கேட்பதும், பெற்றோர் உதவியை மட்டுமே நாடுவதும் நல்லது. கல்விக்கடனை பிறர் கட்டாயத்திற்காக வேறு எந்த முதலீட்டிலும் ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது.
சிறுவயது முதலே அதிகாலை நேரத்தில் படிப்பதையும், பெற்றோர் பெரியோர் ஆலோசனை கேட்பதையும் வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.
அலர்ஜி, ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பிரச்னைகள் வரலாம். உடன் சிகிச்சை அவசியம்.
திங்கட்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். 3 ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதி சென்று வாருங்கள். மாணவப்பருவம் முடிந்ததும், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபனை தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
What's Your Reaction?

